அதானி நிறுவனம் இந்திய அரசை பிரதிநிதித்துவம் செய்கிறதா ? - கோப் குழு கேள்வி

By Vishnu

27 Jun, 2022 | 07:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் அதானி நிறுவனத்தின் செயற்திட்டம் இந்திய அரசினை பிரதிநிதித்துவப் படுத்துவதாக ஏற்றுக்கொள்ள கூடிய ஆவணப்படுத்தலுடனான சாட்சியங்களும் அல்லது இரு நாடுகளுக்கிடையில் ஒன்றிணைந்த வெளிப்படுத்தலும் காணப்படாத நிலையில் இந்நிறுவனத்தின் செயற்திட்டத்தை இரு அரசுகளுக்கிடையிலான செயற்திட்டம் என எவ்வாறு தீர்மானிப்பது என கோப் குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம் சி பெர்டினான்டோ கோப் குழுவிற்கு முன்வைத்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு கோப் குழு பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினான்டோ கடந்த 10ஆம் திகதி  கோப் குழுவில் குறிப்பிட்ட விடயங்களை நீக்குமாறு அவர் கடந்த 11 ஆம் திகதி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் கோப் குழுவிற்கு இரண்டாவது முறையாக அழைக்கப்பட்ட போது பல தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எம்.எம்.சி. பெர்டினான்டோவிடன் சத்தியபிரமாணம் பெறப்பட்டதை தொடர்ந்து குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பெர்டினான்டோ அனுப்பி வைத்த கடிதம் கோப் குழுவின் உறுப்பினர்களி;டம் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் கடந்த வருடம் 2021 ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பெர்டினான்டோவினால் நிதியமைச்சின் அப்போதைய செயலர் எஸ்.ஆர் ஆடிகலவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமும் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கோப் குழுவிற்கு முன்னிலையாகிய இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினான்டோ குழுவில் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை நீக்கிக்கொள்வது தொடர்பில் குழுவிடம் முன்வைத்த கோரிக்கை முழுமையாக பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

எம்.எம்.சி கடந்த 10ஆம் திகதி அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்தற்கமைய கோப் குழு கூட்டத்தின் போது தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் மற்றும் நியாயமற்ற வகையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட விடயம் தவறு என்பதை பெர்டினான்டோ ஏற்றுக்கொண்டார்.

எம்.எம்.சி பெர்டினான்டோ  2021 ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கோப் குழு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய  மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் செயற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மற்றும் காற்றாலை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்திட்டம் (அதானி க்றீன் எனர்ஜி லிமிடெட்) எவ்வாறு ஆரம்பமானது என்பது குறித்து கோப் குழு கேள்வியெழுப்பியுள்ளது.

இந்த கடிதத்தின் இரண்டாம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய இந்த செயற்திட்டம் இரண்டு அரசுகளுக்கிடையிலான செயற்திட்டமாக ஏற்றுக்கொள்வதற்கு அப்போதைய பிரதமரின் வழிகாட்டல் ஏதும் காணப்பட்டதா என்பது தொடர்பில் கோப் குழு கேள்வியெழுப்பியது.

இதற்கு பதிலளித்த பெர்டினான்டோ அரசின் உயர்மட்ட அதிகாரி வழங்கிய வழிகாட்டல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதற்கமைய இரு அரசுகளுக்கிடையிலான செயற்திட்டம் என்பதை தான் விளங்கிக்கொண்டதாக குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் தலைமையில் 2021 ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு ஏதேனும் வழிகாட்டல் முன்வைக்கப்பட்டதா என வினவப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையின தலைவர் கோப் குழுவில் குறிப்பிட்ட விடயத்தை புறக்கணிப்பதாக பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கோப் குழு அவதானம் செலுத்தியது.

பெர்டினான்டோ நிதியமைச்சிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய இச்செயற்திட்டம் இரு அரசுகளுக்கிடையிலானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என கோப்குழுவ கேள்வியெழுப்பியது.

பெர்டினான்டோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதற்கமைய குறித்த செயற்திட்டம் இரு அரசுகளுக்கிடையிலானது என்பதை ஏற்றுக்கொள்வதும் மற்றும் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களினால் அதனை ஏற்றுக்கொள்ளாமலிருப்பதும் என்ற இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுவதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த செயற்திட்டத்தை இரு அரசுகளுக்கிடையிலான செயற்திட்டமாக முன்னெடுத்து செல்வது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும்.ஆகவே தற்போது அது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என எம்.எம்.சி பெர்டினான்டோ குழுவில் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினான்டோ நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கமைய ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையில் தான் விளங்கிக்கொண்டதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கமைய இந்த செயற்திட்டம் இரு அரசுகளுக்கிடையிலான செயற்திட்டமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதானி நிறுவனத்தின் செயற்திட்டம் இந்திய அரசினை பிரதிநிதித்துவப்படுத்துவதாக எவ்விதமான ஏற்றுக்கொள்ள கூடிய ஆவணப்படுத்தலுடனான சாட்சியங்களும் அல்லது இருநாடுகளுக்கிடையில் ஒன்றினைந்த வெளிப்படுத்தல் காணப்படாத நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான செயற்திட்டம் என இதனை எவ்வாறு தீர்மானிப்பது என கோப் குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right