ஓட்டமாவடியில் அதிபர்கள், ஆசிரியர்கள் வீதியை மறித்து போராட்டம் !

By Digital Desk 5

27 Jun, 2022 | 02:40 PM
image

அதிபர்கள், ஆசிரியர்கள் தமக்கு பெற்றோலை வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஓட்டமாவடியில் இன்றையதினம் (27) வீதியை மறித்து  போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

 

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்ட அதிபர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த பாரிய போராட்டம் அதன் தலைவர் எம்.ஐ.செய்னுலாப்தீன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. 

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்னால் வைத்து இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று சுமார் இரண்டரை மணிநேரம் வரை தொடர்ந்தது. 

இதனால், மட்டக்களப்பு - கொழும்பு வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பெற்றோலை வழங்குமாறு கோரி சுலோகங்களை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார, ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆகியோர்கள் வருகை தந்தனர்.

மாணவச் சமூகத்தின் கல்வி செயற்பாட்டிற்காக அதிபர்கள், ஆசிரியர்களுக்கு அவசியம் பெற்றோல் வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை விடுத்து பிரதேச செயலாளர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

குறித்த பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வந்ததும் அதனை அதிபர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர்கள் வாக்குறுதி வழங்கி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்தப் போராட்டத்தில், ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள 27 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,  கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right