அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மீண்டும் வீதிக்கிறங்குவார்கள் - நாலக கொடஹேவா எச்சரிக்கை

By Digital Desk 5

27 Jun, 2022 | 01:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின்  மக்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் வீதிக்கிறங்குவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் தொழிற்துறை தரப்பினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பல தரப்பினர் முன்வைத்த யோசனைகளை தவறாக விளங்கிக்கொண்டமை அரசாங்கத்தின் தோல்விக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

நாட்டின் பிரச்சினை தொடர்பில் பிரதமர்,அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் எவரும் கருத்துரைப்பதில்லை.

ஜனாதிபதியும் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதில்லை. பிரச்சினைக்கு தீர்வு காண அவதானம் செலுத்தாமல் இருந்தால் நாட்டு மக்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்குவார்கள்.

பாராளுமன்றில் ஸ்தீரமான பலமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் என்பதை குறிப்பிட்டுள்ளோம்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என அரசாங்கம் குறிப்பிட்டாலும் அது குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை.

எரிபொருள், எரிவாயு விநியோகத்தில் காணப்படும் சிக்கல் நிலைமை, மின்சார தட்டுப்பாடு மற்றும் மின்சார விநியோக தடை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கம் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right