பொதுப் போக்குவரத்து வளர்ச்சிக்கு அக்கறை காட்டப்படாது ஏன்?

By Digital Desk 5

27 Jun, 2022 | 12:56 PM
image

ரொபட் அன்டனி 

 

நாட்டின் வளர்ச்சி என்பது ஒருவர் சொந்த கார் வைத்திருப்பதை மட்டும் குறிக்காது. மாறாக அந்த நாட்டின் பொதுப்போக்குவரத்து மிகவும் முன்னேற்றமடைந்ததாக காணப்பட வேண்டும். அந்த பொது போக்குவரத்து முன்னேற்றமடைந்ததாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த நாடு முன்னேற்றம் அடைந்ததாக கருதப்படும்.  காரணம் வசதியுடையவர்கள் மற்றும் வசதியற்றவர்கள் சகலரும் தமது பயணத்தை விரைவாக வசதியாக பொது போக்குவரத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம்  இருக்கவேண்டும். 

நாடு பொருளாதார ரீதியில்  கடுமையான நெருக்கடியை சந்தித்திருக்கின்ற நிலையில் பல்வேறு விதமான துயரமான அனுபவங்களை சமூக மட்டத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. 

வரிசைகள் நீண்டு செல்தல்,  மக்களின் காத்திருப்புக்கள்,  தமது தொழிலை செய்வதா?  எரிபொருளுக்கு காத்திருப்பதாக என்ற மக்களின் அங்கலாய்ப்பு,  தவிப்பு போன்றவற்றை காண்கிறோம்.

மக்கள் எதிர்கொள்கின்ற கஷ்டங்கள் அந்தளவுக்கு அதிகரித்து காணப்படுகின்றன. போக்குவரத்தை மேற்கொள்ள எரிபொருள் இன்மையினால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். 

இந்த சூழவில் முக்கியமான ஒரு  மாற்றத்தை அண்மையில் காண முடிந்தது. கொழும்புக்கு வெளியே ஒரு பிரதேசத்தில் இரண்டு வைத்தியர்கள் ரயிலில் தமது வைத்தியசாலை இருக்கும் பிரதேசத்தை நோக்கி பயணித்ததை காண முடிந்தது.

அவர்கள் ரயில் நிலையத்துக்கு சென்று ரயில் எப்போது வரும்?  என்பது தொடர்பான தகவல்களை அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டு இருந்ததை காண முடிந்தது.

இதுவரை  அவர்கள் தமது காரில் பயணித்த நிலையில் தற்போது இந்த பொது போக்குவரத்தான  ரயில் சேவையை தமது போக்குவரத்துக்காக தமது தொழில் நிமித்தமான போக்குவரத்துக்காக  பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதாவது தற்போதைய இந்த நெருக்கடியில் எரிபொருளுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் இவ்வாறான ஒரு நகர்வு இடம்பெறுகின்றது. 

அவுஸ்திரேலியா டென்மார்க் போன்ற நாடுகளில்  சைக்கிள் பயணம் பிரபலமானதாக காணப்படுகிறது.   நிறுவனங்களில் பணிபுரிகின்ற  உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சகலரும் தமது பயணங்களை முடியுமான அளவு சைக்கிள்களில் மேற்கொள்கின்றனர். 

அதேபோன்று பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக ரயில் நிலையங்களில் கார்கள் மற்றும் சைக்கிள்கள் அதிகமாக இருப்பதை காண முடியும். 

ஒரு பயணத்தை மேற்கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் வருகின்ற ஒருவர் ரயில் நிலையத்தில் அங்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு அடுத்து  ரயிலிலேயே தனது பயணத்தை மேற்கொள்வார். 

அதேபோன்று  ஒருவர் சைக்கிளில் குறிப்பிட்ட தூரம் வரை  பயணத்தை மேற்கொண்டு  பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள  இடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது பயணத்தை அவர் ரயிலில் மேற்கொள்வார்.  அல்லது பஸ்களில் கூட பயணம்  மேற்கொள்ள முடியும்.   

மேலும்  கர்ப்பிணிகள், விசேட தேவையுடையோர் வயது முதிர்ந்தோர் என சகலரும் வசதியான முறையில் அந்த பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கூடிய வசதிகள்  செய்துகொடுக்கப்பட்டுள்ளன.   

அதாவது  அபிவிருத்தி எனும்போது நிச்சயமாக அங்கு பொதுப் போக்குவரத்து  பலமானதாக இருக்கவேண்டும்  என்பதே  தீர்க்கமானதாக உள்ளது. 

இந்த நிலைமை தற்போது இலங்கை விடயத்தில் ஆராயப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.  ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது ஒருவர் சொந்த கார் வைத்திருப்பதை மட்டும் குறிக்காது. 

மாறாக அந்த நாட்டின் பொதுப் போக்குவரத்து மிகவும் முன்னேற்றமடைந்ததாக காணப்பட வேண்டும்.  அந்த பொது போக்குவரத்து முன்னேற்றமடைந்ததாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த நாடு முன்னேற்றம் அடைந்ததாக கருதப்படும். 

காரணம் வசதியுடையவர்கள் மற்றும் வசதியற்றவர்கள் சகலரும் தமது பயணத்தை விரைவாக வசதியாக பொது போக்குவரத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம்  இருக்கவேண்டும். 

பொது போக்குவரத்தின் ஊடாக நேர தாமதமின்றி நெரிசல் இன்றி தமது பயணத்தை சென்றடைய முடியும்.   தமது  தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பயணங்களை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு நிலைமை நாட்டில் காணப்பட வேண்டும்.  அவ்வாறு ஒரு வளர்ச்சி அடைந்த பொதுப்போக்குவரத்து காணப்படும் பட்சத்தில் மட்டுமே அந்த நாடு வளர்ச்சி அடைந்ததாக காணப்படும். 

மாறாக சமூகத்தில் ஒரு பிரிவினர் மட்டும் கார்களில் தமது பயணங்களை மேற்கொள்வது மற்றும்   வருமானம் குறைந்த தரப்பினர் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் பொது போக்குவரத்தை மேற்கொள்வதும் ஒரு அபிவிருத்தி அடைந்த நிலைமையாக இருக்காது,   காரணம் அபிவிருத்தி அடைந்த நாட்டில் கூட எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும்.   

எனவே நாட்டில் பொது போக்குவரத்து வளர்ச்சியடைந்து காணப்படும் பட்சத்தில் அந்த நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியில் முன்னேற்றம் அடைவதற்கான ஆற்றலைக் கொண்டு இருக்கின்றது என்பதே இங்கு முக்கியமாகவுள்ளது.  

எனவே இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதைய  இந்த எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட நிலைமையில் பொது போக்குவரத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள்களில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கான பயணத்தை மேற்கொள்ளுகின்றனர்.

குறிப்பிட்ட தரப்பினர் கார்களை வைத்திருக்கின்றனர்.  அவர்கள் அந்த கார்களின் ஊடாக தமது தொழிலுக்கான பயணத்தை மேற்கொள்கின்றனர்.  குறிப்பிட்ட தரப்பினர் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். 

இலங்கையை பொறுத்தவரையில் 50 லட்சம் கார்கள் மற்றும் 48 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக நிதியமைச்சின் அறிக்கை கூறுகிறது.  இலங்கையை பொறுத்தவரையில் 80 லட்சம் தொழிற்படை உள்ளது.

இந்த  80 லட்சம் தொழிற்படையில் அதிகமானோர் எவ்வாறு தமது நடவடிக்கைகளுக்கு பயணிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

இலங்கையில் பொது போக்குவரத்து  முக்கியமாக நாட்டின் பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை பாரிய முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தவேண்டும். இலங்கையில் ரயில் போக்குவரத்து  சிறந்ததொரு செலவு குறைந்த உடலுக்கு அசதியை தராத ஒரு சிறந்த போக்குவரத்து மார்க்கமாக காணப்படுகிறது. 

ஆனால் ஆங்கிலேயர் காலத்திலேயே இலங்கைக்கு இந்த ரயில் போக்குவரத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்  அதன் பின்னர் மிகப்பெரிய ஒரு நவீன அபிவிருத்தியை நோக்கிய முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வில்லை என்பது தெரிகின்றது.   

ஆங்கிலேயர்களினால்  ஸ்தாபிக்கப்பட்ட ரயில் கட்டமைப்பே  இன்றும் காணப்படுகிறது.  ரயில் தண்டவாளங்களின் அளவு  அதிகரிக்கப்பட்டுள்ளது.  எனினும் தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணிகளினால்  அதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டதா என்பதை பார்க்கவேண்டும். 

 முக்கியமாக இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்     சுரங்க ரயில் சேவை  மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் சேவை என மிக வலுவானதாக காணப்படுகின்றது. 

மிக குறுகிய நேரத்தில் குறைந்த செலவில் இந்த மெட்ரோ ரயில் பயணங்கள் அந்த நாடுகளில் மேற்கொள்ள முடியுமாக இருக்கின்றது. 

இது அந்த நாட்டின்  உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. மனித நேரத்தை பயனுடையாக மாற்றுகிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ரயில் பயணம் என்பது தாமதம் என்ற ஒரு அடையாளத்தை  கொண்டிருக்கின்றது.  எனவே அதில் பாரியதொரு முன்னேற்றம் அவசியமாகின்றது. 

இந்தியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த ரயில் துறையில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து இருக்கின்ற போதிலும் நாம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பது புலனாகின்றது.  இன்னும்  ஆங்கிலேயர் போடப்பட்ட  கட்டமைப்புடனேயே   எமது  ரயில் சேவை காணப்படுகின்றது என்பது முக்கியமாகும்.   

அவ்வாறு ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை சிறந்த முறையில் பலப்படுத்தியிருந்தால் தற்போதைய இந்த எரிபொருள் நெருக்கடி நேரத்தில் மக்கள் ரயில் சேவையை அதிகளவாக பயன்படுத்தி இருப்பார்கள்.   

பல நகரங்களை இணைக்கின்ற மெட்ரோ ரயில் திட்டங்களை கடந்த இருபது முப்பது வருடங்களில் நடைமுறைப் படுத்தி இருந்தால் மக்கள் அதிகளவில் தமது வாகனங்களை வீடுகளில் வைத்துவிட்டு ரயில் பயணங்களையே  தேர்வு செய்திருப்பார்கள்.   

அப்போது எரிபொருள் செலவும் குறையும் என்பதுடன்  எரிபொருளுக்கான டொலர் செலவும்  குறைகின்றது.  எனவே இந்த விடயத்தில் இலங்கை உடனடியாக ஒரு வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.   

ஐரோப்பிய நாடுகளில் பஸ் பயணம் என்பது மிகவும் சொகுசானதாகவும்   அசதி அற்றதாகவும் செலவு குறைந்ததாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் காணப்படுகின்றது. 

எனவே அதற்கு ஏற்ற வகையிலான ஒரு பஸ் போக்குவரத்தை இலங்கையில் கொண்டுவரவேண்டும்.   சிறந்த  தரத்துக்கு உட்பட்ட ஒரு பஸ் போக்குவரத்து சேவை நாட்டில் காணப்பட வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது நிச்சயமாக பஸ் போக்குவரத்திலும் ஒரு முன்னேற்றத்தை காண முடியும். 

எனவே தற்போதைய நெருக்கடி நிலைக்கு பதிலளிக்கும் முகமாக  இந்த பொது போக்குவரத்தை பலப்படுத்துவது மிக முக்கியமாக இருக்கின்றது. 

பொது போக்குவரத்து முன்னேற்றமடையும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் நிச்சயமாக மக்கள் அதிகளவு தமது வாகனங்களை எரிபொருளை செலவழித்து பயன்படுத்துவதை தவிர்த்து இந்த பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு முன் வருவார்கள். 

அதனூடாக நாட்டில் எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ள முடியும். டொலர்கள்  வெளி செல்வதை குறைக்க முடியும்.  அதனை எனைய அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக பயன்படுத்தமுடியும்.  அதேபோன்று நாட்டின் சுற்றாடல் பாதிப்பையும் குறைக்க முடியும். 

எனவே அரசாங்கம் இந்த நேரத்திலாவது  நெருக்கடியை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாட்டின் ரயில் மற்றும் பஸ்  போக்குவரத்தை ஒரு வளர்ச்சி அடைந்த நவீனகரமான மக்களுக்கு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலானதாக    உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right