(எம்.மனோசித்ரா)
எரிபொருள் இறக்குமதியில் எரிநோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். அத்தோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்டார் ஜனாதிபதியிடமிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதே வேளை நீண்ட நாட்களாக எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் இராணுவம் உட்பட பாதுகாப்புபடையினர் ஊடாக டோக்கன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் இரு வாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இன்று முதல் டோக்கன்
தற்போது மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக 550 - 600 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. இதனை 300 - 350 மில்லியன் டொலர்களாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு எரிபொருள் இறக்குமதி செலவினைக் குறைக்கும் பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டளவில் எரிபொருளை விநியோக்க முடியும்.
வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாளை (இன்று திங்கட்கிழமை) முதல் முப்படையினர் ஊடாக டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. பாதுகாப்பானதாகவும் நேர்த்தியான முறையிலும் டோக்கன்களை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு;ள்ளது. அவர் பாதுகாப்பு செயலாளருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.
ஐ.ஓ.சி.யிடம் விநியோகத்தை அதிகரிக்க கோரிக்கை
தற்போதுள்ள நிலைமைகளில் எந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என்று கூற முடியாது. எனவே தான் டோக்கன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதனை 1000 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள்
எரிபொருள் இன்றி அவற்றின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு இதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் தொகையினை பொது போக்குவரத்துக்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் , துறைமுகம் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த சுத்திகரீப்பு நிலையம் மூடப்பட்டது
இம்மாதம் 29 ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் குறித்த தினத்தில் அந்த கப்பல் வராது என்றும் , ஜூலை 3 அல்லது 4 ஆம் திகதியே வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த திகதிகளிலும் கப்பல் வருமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டை வந்தடையும் வரை சம்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விநியோகத்தில் சிக்கல்
எண்ணெய் சுத்தீகரிப்பு இடம்பெறவில்லை எனில் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாது. எனவே தான் அதன் விலைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இதன் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படும். விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெருவோர் உள்ளிட்டோருக்கு நிவாரண விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.
தற்போதைய எரிபொருள் கையிருப்பு
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 8000 - 9000 மெட்ரிக் தொன் டீசலும் , 5500 - 6000 மெட்ரிக் தொன் பெற்றோலும் கையிருப்பில் உள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 10 000 மெட்ரித் தொன் எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றோம். ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய விருப்பமில்லை என்று கூறுவது தவறாகும். இதற்கு முன்னர் ரஷ்ய நிறுவனத்தின் எரிபொருள் கப்பலை முற்பதிவு செய்த போது , எம்மால் விடுவிக்கப்பட்ட கடன் கடிதம் சர்வதேச வங்கியொன்றினால் நிராகரிக்கப்பட்டது.
ரஷ்யா செல்லும் அமைச்சர்கள்
இவ்வாறான தொழிநுட்ப காரணங்களின் காரணமாகவே ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இது போன்ற சிக்கல்களை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்வினைப் பெற்றுக் கொள்வதன் நிமித்தம் இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். எமக்கு எரிபொருளை வழங்கும் நாடு எதுவானாலும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனவே குறைந்த விலையில் எந்த நாடு எரிபொருளை வழங்கினாலும் அந்த நாட்டிடமிருந்து பெற்றுக் கொள்ள நாம் தயாராக உள்ளோம்.
புலனாய்வு பிரிவு பணிப்பாளரிடம் கோரிக்கை
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தயார் என தெரிவிக்கும் நிறுவனங்கள் , பின்னர் அந்த தீர்மானத்திலிருந்து பின்வாங்குவதன் பின்னணியில் எவரேனும் இருக்கின்றனரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே இது தொட்பில் அவதானம் செலுத்துமாறு புலனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கொருமுறை விலை திருத்தம்
அத்தோடு இனி வரும் காலங்களில் இரு வாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். விலைசூத்திரத்திற்கமைய விலை திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.
கட்டாரிடமிருந்து அழைப்பு
கட்டார் ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையின் தூதுக்குழுவொன்று அந்நாட்டுக்கும் விஜயம் செய்யவுள்ளது. அத்தோடு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் குவைத் அரசாங்கமும் சாதகமான சமிஞ்ஞையைக் காண்பித்துள்ளது.
கல்வி அமைச்சிடம் கோரிக்கை
எவ்வாறிருப்பினும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் இரு வாரங்களுக்கேனும் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியூடாக முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
தனியார் துறை
அத்தோடு தனியார் துறையிலும் இயலுமானவரை வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோருகின்றோம். இந்தியாவிலிருந்து விஜயம் செய்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களில் எரிபொருள் இறக்குமதிக்காக மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜதந்திரிகளுடன் பேச்சு
அத்தோடு நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜதந்திரகள் குழுவுடன் நாளை (இன்று திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 க்கு வலு சக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்குழுவினரிடம் இந்த நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM