எரிபொருள் பற்றாக்குறை - எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை பாதிக்கப்படும் நிலை - ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

By T Yuwaraj

26 Jun, 2022 | 06:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் பற்றாக்குறை,பேரூந்து கட்டணம் அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்து சேவையினை தற்போது பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.

Articles Tagged Under: ரயில்வே திணைக்களம் | Virakesari.lk

ரயில் சேவை பாதிக்கப்பட்டால் பொது போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.ரயில் சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலர் கசுன் சாமர அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எரிபொருள் பற்றாக்குறை நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரதான பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்திய மக்கள் தற்போது ரயில் போக்குவரத்து சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

எரிபொருள் கிடைப்பனவில் காணப்படும் பாரிய சிக்கல் நிலை ரயில் திணைக்களத்தின் சேவையாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய சேவையாளர்கள் சேவைக்கு சமுகமளிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் அரச சேவையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் நிலைய சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்து கவனம் செலுத்தப்படாமலிருப்பது கவலைக்குரியது.

தற்போதைய நிலையில் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையினை பயன்படுத்துகிறார்கள்.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டால் முழு போக்குவரத்து கட்டமைப்பும் முழுமையாக ஸ்தம்பிதமடைம் ஆகவே புகையிரத சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right