சம்பின்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி : இன்று 3 போட்டிகள்

By Vishnu

26 Jun, 2022 | 06:00 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இதுவரை ஒரு போட்டியிலேனும் வெற்றிபெறாமல் அணிகள் நிலையில் கடைசி இடத்தில் இருக்கும் பொலிஸ் கழகம், இன்று (26) முதல் வெற்றியை குறிவைத்து சுப்பர் சன் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடுநிலையான காலி பொது விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2 வெற்றிகளுடன் அணிகள் நிலையில் 5ஆம் இடத்தில் உள்ள சுப்பர் சன் கழகத்தை பொலிஸ் கழகம் வெற்றிகொள்வது இலகுவாக அமையும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், பொலிஸ் கழகம் இதுவரை பங்குபற்றிய 3 போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் வித்தியாசமான வியூகங்களை அமைத்து வெற்றி பெறுவதற்கு வீரர்கள் முழு மூச்சுடன் விளையாடுவார்கள் என பொலிஸ் கழக பயிற்றுநர் மஹிந்த கலகெதர தெரிவித்தார்.

அதேவேளை சுப்பர் சன் கழகம் தனது 3ஆவது வெற்றிக்காக முயற்சிக்கவுள்ளது.

ஜாவா லேன் எதிர் சொலிட் ஜாவா லேன் கழகத்துக்கும் சொலிட் கழகத்துக்கும் இடையிலானன போட்டி குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

அணிகள் நிலையில் 7 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ள ஜாவா லேன் முதல் தடவையாக கொழும்புக்கு வெளியே சென்று விளையாடவுள்ளது.

சொலிட் கழகத்தைவிட ஜாவா லேன் பலசாலியானபோதிலும் கடந்த போட்டியில் போன்று தவறுகள் இழைக்காமல் விளையாடினால் மாத்திரமே அவ்வணிக்கு வெற்றி பெறக்கூடியதாக இருக்கும்.

இது இவ்வாறிருக்க, இ.போ.ச. கழகத்துக்கும் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி சுகசததாச அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம்கொண்ட  அணிகளாகத் தென்படுவதால் இந்தப் போட்டி கடைசிவரை பரப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right