புரட்சியால் மாற்றம் தேடி சிதைந்து போன தேசம்

By Digital Desk 5

26 Jun, 2022 | 06:43 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

அதிகாரபோதையில் ஆட்சி நிர்வாகத்தை அராஜகமாக்கும் ஜனாதிபதி இருத்தலுக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிட்டு நிற்கும் துனீசிய மக்கள்

 

புரட்சி பற்றி பேசுகிறோம். நம்பிக்கை கொள்கிறோம்.  அறிஞர் பேர்னாட் ஷா புரட்சியைப் பற்றி சொல்வதைக் கேட்க வேண்டும். “புரட்சிகள் அராஜகத்தின் பளுவைக் குறைத்தது கிடையாது. மாறாக, அவை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாறுகின்றன” என்பார் அவர்.

இதற்கு சிறந்த உதாரணம் துனீசியா. நவீன அரசியல் வரலாற்றில் பெருச்சாளிகளாகத் திகழ்ந்த கறைபடிந்த ஆட்சியாளர்களை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்த தேசம். இந்தத் தேசம் இன்று வறுமையின் பிடியில் சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டு நிற்கிறது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும், பலமான தொழிற்சங்க அமைப்புக்களின் இழுபறிகளுக்கு மத்தியில், துனீசிய மக்கள் ஊசலாடுகிறார்கள். குறைந்த சம்பளம், முடங்கிக் கிடக்கும் ஜீவனோபாயம், அதிகரிக்கும் வறுமை மற்றும் வேலைவோய்ப்பின்மை. 

இவற்றிற்கு மத்தியில் சீர்திருத்தம் என்ற பெயரில், சம்பளத்தைக் குறை, ஆட்களைத் பணிநீக்கம் செய், செலவுகளைக் கட்டுப்படுத்து என்ற நிபந்தனைகள் சர்வதேச நாணயநிதியம் விதித்தால் என்ன செய்வது?

2011இல் நிகழ்ந்த துனீசியாவின் புரட்சி சிறப்பானது. அது அரேபிய மண்ணில் அராஜக ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த ‘ஒரேஞ்சுப் புரட்சியின்’ ஆரம்பப் புள்ளி.

துனீசியாவை 23 வருடகாலம் ஆட்சி செய்த ஜனாதிபதி ஷினே அல்-ஆப்தீன் பென்-அலி. மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர். படோபடத்திற்கும் ஆடம்பரத்திற்கும் குறைவில்லை. 

ஜனாதிபதியின் குடும்பமே சுகபோக வாழ்க்கை அனுபவித்தபோது, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு உணவின்றி கஷ்டப்பட்ட இளைஞனொருவன், நடுவீதியில் தமக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டான். அந்தத் தீ நாடெங்கிலும் புரட்சியாகப் பரவி, ஆட்சியாளர்களைத் தூக்கியெறிய வழிவகுத்தது.

ஆட்சியில் அராஜகம் செய்த பென்-அலிக்கு சிறைத்தண்டனை. சட்டவிரோதமாக சொத்து சேர்த்த அவரது மனைவிக்கும் தண்டனை கிடைத்தது. இருவரும் சவூதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றதால், தண்டனையை அனுபவிக்கவில்லை.

அரசியல் கட்டமைப்பில் அராஜகத்தையும், சமூகக் கட்டமைப்பில் ஊழலையும் இல்லாதொழித்த புரட்சியின் மூலம், சிறப்பானதொரு ஜனநாயகம் உருவாகியிருக்க வேண்டும்.

அத்தகையதொரு ஜனநாயக நடைமுறை பொய்த்துப் போனதால், துனீசிய தேசம் தற்போது, அபாயகரமானதொரு குறுக்குச் சந்தியில் நிற்கிறது.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கங்கள் ஓய்ந்து விடவில்லை. ரஷ்ய உக்ரேனிய யுத்தத்தின் விளைவுகளில் இருந்தும் தப்ப முடியவில்லை. இவை பொருளாதார சுபீட்சத்தை மாத்திரம் அன்றி, எதிர்கால சீர்திருத்தங்களையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. 

பொருட்களின் விலை அதிகம். இறக்குமதி செய்வதில் சிக்கல். செலுத்த வேண்டிய கடன் அதிகம். வெளியில் இருந்து பணம் வருவது கிடையாது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடுவதே, கடன் நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து, மக்களின் அடுத்த வேளை உணவை உறுதி செய்யக்கூடிய வழி.

துரதிருஷ்டவசமாக, 2011ஆம் ஆண்டில் முகிழ்த்த புரட்சி, எதிர்பார்த்த இலக்குகளை அடைவில்லை.  பென் அலிக்குப் பின்னர் வந்த புதிய ஆட்சியாளர்கள் ஜனநாயக மாற்றம் நோக்கி நகர்ந்தார்கள். லிபரல் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்க முனைந்தார்கள்.

இருந்தபோதிலும், அரசியல்வாதிகள் மத்தியில் வரலாற்று ரீதியான உட்பூசல்கள் இருந்தன. இஸ்லாமிய மற்றும் மதச்சார்பற்ற கோட்பாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் சமூகத்தை முனைவாக்கம் செய்தன. 

பென்-அலி தொடக்கி வைத்த ஊழலை ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் இருந்து முற்றாக ஒழிக்க முடியவில்லை. பாதுகாப்புத்துறையும் நீதிமன்றமும் கூட ஊழலில் இருந்து தப்பவில்லை. இதன் காரணமாக, மாற்றத்தை நாடிய புரட்சியில் மக்கள் எதையெல்லாம் கேட்டார்களோ, அதையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் போனது.

மக்கள் ஜனநாயக நிறுவனங்களில் படிப்படியாக நம்பிக்கை இழந்தார்கள். தமது வாக்குகள் சூறையாடப்பட்டு விட்டதாகக் கருதினார்கள். இலக்குகளை அடையாத புரட்சியும், மக்கள் நம்பிக்கையிழந்த ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமோ, அதே தான் துனீசியாவிலும் நடந்தது.

மீண்டும் அதிகார மையங்களுக்கு இடையில் போட்டி வந்தது.  ஜனாதிபதிக்கு கூடுதலான அதிகாரங்கள் உண்டு. அவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு ஆட்சிபீடத்திற்குத் தெரிவானவர். 

மறுபுறத்தில், துனீசியாவின் பாராளுமன்றம். இதில் புரட்சியை வழிநடத்திய என்னஹ்தா என்ற இயக்கம் சார்ந்த அரசியல் கட்சிக்கு பெரும்பான்மைப் பலம் உண்டு. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜனாதிபதி கைஸ் சையது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தார். பாராளுமன்றத்தை முடக்கினார். 

அவரது சகல நடவடிக்கைகளும் அதிகாரத்தை தம்வசம் குவித்துக் கொள்ளக்கூடிய நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. தமக்கு எதிராக மக்கள் மீண்டும் கிளர்ச்சி செய்தபோது, ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். அவசர கால நிலைமையை மேலும் நீடித்தார்.

நீதித்துறையை அறவே பிடிக்காது. ஊழல் மிக்கவர்கள், பயங்கரவாதிகளுக்குத் துணை போகிறவர்கள் என்று குறைகூறி, 57 நீதிபதிகளை பதவிநீக்கம் செய்தார். ஊடகங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றபோதிலும், தமது அதிகாரத்தை நீடித்துக் கொள்வதிலேயே ஜனாதிபதி குறியாக இருந்தார். புரட்சிக்குப் பின்னர் வரையப்பட்டு 2014ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த அரசியல் யாப்பிற்கு பதிலாக புதியதொரு அரசியல் யாப்பை வரைந்தார்.

முன்னைய அரசியல் யாப்பில், துனீசிய தேசத்தின் உத்தியோகபூர்வ மதம் இஸ்லாம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. புதிய நகல் அரசியல் யாப்பில் இஸ்லாம் என்ற சொல்லே இருக்காது என்றார். 

இது என்னஹ்தா இஸ்லாமிய புரட்சி இயக்கத்தைப் பழிவாங்க ஜனாதிபதி செய்த செயல். நகல் அரசியல் யாப்பை அடுத்த மாதம் 25ஆம் திகதி கருத்துக்கணிப்பில் விட்டு, அதற்கு அங்கீகாரம் கோருவது ஜனாதிபதியின் திட்டம்.

அரசியல் அதிகாரத்தின் மீது அதிக கவனம் என்பதால், பொருளாதாரத்தின் மீது அதிக அக்கறை இல்லை. தற்போது, துனீசியா மிகவும் சிக்கலானதொரு நிலைமைக்குள் இருக்கிறது. இந்த நிலைமையில் இருந்து மீள வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மாத்திரம் போதாது. வெளியில் இருந்து உதவி செய்யக்கூடிய அமைப்புக்களினதும், நாடுகளினதும் கூட்டான உதவி அவசியம்.

எல்லா அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து உதவி செய்ய முன்வந்தாலும், துனிசியாவுடன் பேசுவதற்கு ஒரு தரப்பு இருக்க வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியின் அதிகார மோகத்தால் சகலதும் சிதறியிருக்கின்றன.

ஜனநாயக ஆட்சி நிர்வாக முறையின் முக்கியமான மூன்று அம்சங்களான நிறைவேற்று அதிகாரபீடம், சட்டவாக்க மன்றம், நீதித்துறை ஆகியவற்றிற்கு இடையில் எதுவித ஒருங்கிணைப்பும் கிடையாது.

உதவி வழங்கும் அமைப்புக்கள் நிபந்தனை விதிப்பது பொதுவானதே. அந்த நிபந்தனைகள் மக்களுக்கு ஆகக்கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதற்கு அரசின் சார்பில் மக்களுக்காக பேரம் பேச வேண்டும்.

பேரம் பேசுவதை விடுத்து, அதிகாரத்தைக் குவித்துக் கொள்வதில் அக்கறை காட்டும் அரசியல்வாதிகளைத் தான், துனீசியப் புரட்சி உருவாக்கியிருக்கிறது என்றால், புரட்சிக்கு புதிய வியாக்கியானம் கூறிய பேர்னாட் ஷாவைத் தான் மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24
news-image

மனோ கணேசனின் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா ?

2022-11-27 13:43:54
news-image

ரணிலோடு இணைந்து பயணிக்க தீர்மானித்துவிட்டதா இ.தொ.கா....

2022-11-27 12:41:36
news-image

முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வு அவசியம்

2022-11-27 11:27:26