இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா?

By Digital Desk 5

26 Jun, 2022 | 06:47 PM
image

லோகன் பரமசாமி

தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள இலங்கை அரசு பொருளாதார வலிமையை முற்றாக இழக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையானது, இலங்கை, இந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியலில் தாக்கத்தை விளைவிககுமா? இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதொரு மாற்றத்தை  உருவாகுமா? என்ற ஆழமான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.   

தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தமானது இலங்கைத் தீவில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அத்துடன், இந்தியாவின் தெற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இருந்தது. அத்தோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்மைத் தானத்தைப்  தக்கவைப்பதற்கும் பெரும்பங்காற்றியது.

இந்திய, இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட காலப்பகுதியை எடுத்து நோக்கினால் ஜெயவர்த்தன அரசாங்கம் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கவும், அதற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல்களை முன்னெடுத்தமையால்   அரசாங்கம் செய்வதறியாது திகைத்திருந்த நிலைமையே காணப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலிதாக்குதல் ஜுலை மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றமையும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழலையும் தனக்கு சதகமாகப் பயன்படுத்திய இந்திய அரசு, நாடுகளுக்கிடையிலான  இறையாண்மையை மீறி, வடக்கு, கிழக்கு பகுதியில் விமானம் மூலம்  உணவுப் பொதிகளை வீசியது. 

அத்துடன் தனது படைகளையும் இலங்கைக்கு அனுப்பியது. இவ்வாறான சூழலில் இலங்கை அரசு, இந்தியாவிடம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கையாளும் வகையிலான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. குறித்த ஒப்பந்தம் 13ஆம் திருத்த சட்டமாக பரிணமித்து தற்போது வரையில் அரசியலமைப்பில் நீடித்துக்கொண்டிருக்கினறது. 

ஓப்பந்தத்தின் பிரகாரம், வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்று காணப்படுகின்றபோதும்,  பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் வடக்கையும் கிழக்கையும்  நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி இரு கூறுகளாக பிரித்துவிட்டது. 

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35ஆண்டுகளாகின்ற நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகப்பெரும் இடைவெளிகள் தற்போது காணப்படுகின்றன. 

இவற்றில் முக்கியமாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைகளின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவையாகின்றன. 2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கைக் கடற்படையினர் 284இந்திய மீனவர்களை கடல் எல்லையை மீறினார்கள் என்ற குற்றசாட்டின் பேரில் கைது செய்துள்ளனர். அதேவேளை 53இந்திய மீனவப் படகுகளையும் பறித்தெடுத்துள்ளனர். 

இந்தியாவும், ஜப்பானும் கூட்டிணைந்து மேற்கொண்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தினை இலங்கை அரசு மீளப்பெற்றுக் கொண்டது. இறுதியில் இந்தியாவைச் சமாளிப்பதற்காக மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது இலங்கை அரசாங்கம். 

இவற்றைவிடவும், சீன சார்பு நிலையால் இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை இலங்கை சம்பாதித்துக் கொண்டது.  இலங்கையில் பொருளாதார ரீதியாக சீனா தனது கால் தடங்களை ஆழமாப் பதித்து வருகிறது. இது இந்திய இலங்கை உறவில் பெரும் தாக்கத்தை விளைவித்துள்ளது. 

2010ஆம் அண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இலங்கையில், சீனா 23.6சதவீத நேரடி முதலீட்டாளராகவும் இந்தியா 10.4 சதவீத நேரடி முதலீட்டாளராகவுமே இருந்துள்ளன. 

இதற்கு அப்பால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை  சீனாவுக்கு 99வருட குத்தகைக்கு கொடுத்தமை, கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு வெகுவான அதிருப்திகள் உள்ளன. 

ஏற்கனவே அமெரிக்க தலையீட்டை தவிர்க்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிலையில் சீன தலையீடு இந்தியாவின் மிகவும் கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையில் தற்போது, நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவிகளை வழங்கும் அதேநேரம் அச்சூழலை எவ்வாறு தனக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என்ற சிந்தனையும் இந்தியாவுக்குள்ளது.

புதிய உலக ஒழுங்கின் அடிப்படையில் ரஷ்யா, உக்ரேன் மீது தனது இறையாண்மையை பயன்படுத்த முடியுமாயின் அயல்நாடான இலங்கை மீது இந்தியா ஏன் இறையாண்மையை பயன்படுத்த முடியாது என்ற தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கம் விளைவிக்கும் என்ற கணிப்பைச் செய்துள்ள அரசியல் அவதானிகள் சீனா, தனது ஆக்கிரமிப்பை தாய்வான் மீது செலுத்தலாம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். ஆனால் அவ்விதமான ஆக்கிரமிப்பை  இந்தியா ஏன் இலங்கை மீது, செலுத்த முடியாது என்ற கேள்விக்கு அவர்கள் விடையைக் கண்டிருக்கவில்லை. 

இந்தியாவுக்கு அவ்விதமான ஆக்கிரமிப்பைச் செலுத்துவதற்கு சாதகமான நிலையானது தற்போதைய காலத்தை தவிர, எதிர்காலத்தில் எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்பட்ட நம்பிக்கைத் தளர்வு இறுக்கமான உறுவுகளை ஏற்று கொள்ள முடியாத சூழலை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன.  

ஆனால் தற்பொழுது, பாரிய கடன்கள், மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எழுந்துள்ள பற்றாகுறையும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம், என்பது உள்ளிட்ட பல்வேறு  நிதி நிறுவனங்களிடத்தலும் உதவிகளைக் கோர வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையின் காரணமாக இலங்கை அனைத்துவிதமான மாற்றுக் கொள்கைகளையும் கைவிட்டு  பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் சரணாகதி அடையும் நிலைக்கு வந்துவிட்டது.  அத்துடன், இந்தியாவிடத்தில் அண்மைய காலத்தில் பொருளாதார பலம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பது தான் பிரதான கேள்வியாகின்றது.  

2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தெற்காசியாவிலேயே  அரசில் ரீதியாக மிகுந்த விலிமை உடைய நாடாக தன்னை காட்டிக்கொண்டது.  பிராந்தியத்திலேயே மிகவும் திறமையாக பயிற்சி பெற்ற இராணுவ குழுக்களை கொண்ட அரசாங்கமாகவும் கருதப்பட்டது. சீனாவையும், இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தினையும் இராஜதந்திர ரீதியாக கையாளும் பலவானாகவும் இலங்கை அரசு கருதப்பட்டது. 

ஆனால் தற்பொழுது, அவை அனைத்தையும் இழக்கப்பட்டு, அன்றாட வாழ்கைக்கைக்கே உதவிகளை கோரும் நிலையில் இலங்கை அரசு இருக்கின்றது. இந்தநிலையில் இந்திய ஊடகங்களில் இலங்கை பிரதமர் ரணிலின் கூற்றை மையமாக வைத்து வெளியான கட்டுரைகளில் இலங்கையும், கேரளாவும், தமிழ்நாடும் மிக இலகுவாக ஒன்றுடன் ஒன்று இசைவடைந்து விடக்கூடியன என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளன. 

இந்தியாவில் தென்பிராந்திய மாநிலங்களின் மொத்த உற்பத்தியும் இலங்கையின் மொத்த உற்பத்தியையும் இணைத்தால் 500 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். அவ்விதமான ஒருமித்த உற்பத்தியானது, தெற்காசிய உற்பத்தி பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது. 

இதனால், இந்தியாவின் துணைப் பிராந்தியமாக இலங்கையும் இணைந்து கொள்வது பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்ற நோக்குகளும் வெகுவாக உள்ளன.  இன்னும் சில இந்திய சிவில் சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில்  மன்னாரின் ஊடாக இராமேஸ்வரத்தையும் திருகோணமலையும் இணைத்து மிக பாரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்துடன் சீன செல்வாக்கையும் கையாள்வதும் இலகுவடைந்து விடும். அது இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் சிறந்தது என்ற பார்வையும் உள்ளது.

ஆக தற்போது, உக்ரேன் மீதான ரஷ்ய படை எடுப்புடன் எழுந்துள்ள  உலக ஒழுங்கின் அடிப்படையிலும் யதார்த்த ரீதியான இந்திய, இலங்கை நிலைமையையும் எடுத்த நோக்கினால் புதியதோர் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகுமா என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. அவ்வாறு உருவாகும் ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது தான் அடுத்துள்ள பிரதான விடயமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right