(ஏ.ஆர்.ஏ.பரீல்)

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே கிராம சேவையாளர் பிரிவு பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான ஓடுதளமும் களஞ்சியசாலையும் நிறுவப்பட்டுள்ளது. அபுதாபி நிறுவனம் ஒன்று நிர்மாணிக்கவுள்ள ஹோட்டலை உடன்நிறுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.

 கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வேண்டுகோளை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'எமது நாட்டின் நகர்ப்புறக் காணிகளும் தப்லீக் எனும் முஸ்லிம்களின் அமைப்பினால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு வருகின்றன. 

இது ஆபத்தான விடயமாகும். தினமும் நகர்புறங்களில் 10 ஏக்கர் காணிவீதம் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு திட்டமிட்டு செயற்படுத்தப்படுகிறது. 

இது தப்லீக் அமைப்பின் காணி கொள்ளையடிப்பாகும். 

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்தி நிலத்தை அபகரிக்க முயற்சித்தார். ஆனால் அதே வேலையை தப்லீக் அமைப்பு நகர்ப்புற காணிகளின் பெறுமதியை விட 10 மடங்கு பணம் செலுத்தி அபகரிப்புச் செய்கிறது. 

வஹாபிசத்தைப் பரப்பும் ஒரு சிறு குழுவினரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.