மாவனெல்லை செரெண்டிப் கழகத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது சோண்டர்ஸ்   கழகம்

25 Jun, 2022 | 09:55 PM
image

(நெவில் அன்தனி)

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கடந்த 3 வாரங்களாக கொடிகட்டிப் பறந்த மாவனெல்லை செரெண்டிப் கழகத்தை அதிரவைத்த  சோண்டர்ஸ்   கழகம் தனது முதலாவது வெற்றியை இன்று பதிவு செய்தது.

நியூ ஸ்டார் கழகத்துக்கும் சென் மேரிஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

நிகம்போ யூத், மாத்தறை சிட்டி ஆகிய கழகங்கள் தத்தமது போட்டிகளில் வெற்றிபெற்றன. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் மாத்தறை சிட்டி முதலிடத்துக்கு முன்னேறியது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற செரெண்டிப் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் 31 நிமிடங்களுக்குள் 3 கோல்களைப் போட்ட சோண்டர்ஸ் கழகம் 5 - 1 என்ற  கோல்கள்      அடிப்படையில் அபார வெற்றி ஈட்டியது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் கடந்த வாரம் வரை தோல்வி அடையாமல் இருந்த செரெண்டிப் கழகம் முதல் தடவையாக இவ் வாரம் தோல்வி அடைந்தது.

நிரேஷ் சுந்தரராஜ் 3 கோல்களைப் போட்டதுடன் மற்றொரு கோலுக்கு உதவி சோண்டர்ஸுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் டிலான் டி சில்வா வலதுபுறத்தில் இருந்து பரிமாறிய பந்தை மிக வேகமாக கோலினுள் புகுத்திய நிரேஷ் சுந்தரராஜ் 6 நிமிடங்கள் கழித்து இரண்டாவது கோலைப் போட்டு சோண்டர்ஸ் கழகத்தை 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இட்டார்.

31ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பெற்ற பந்தை சுந்தரராஜ் மிக சாதுரியமாக இடப்புறமாக ஓடிய பெத்தும் கிம்ஹானவை நொக்கி பரிமாறினார். பெத்தும் கிம்ஹான கோல் வாயிலில் இருந்து மிக இலகுவாக கோல் போட சோண்டர்ஸ் கழகம் இடைவேளையின் போது 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

சோண்டர்ஸ் கழகம் இடைவேளைக்கு முன்னர் குறைந்தது 3 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டதுடன் செரெண்டிப் கழகம் 2 வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தின் வேகம் சற்று குறைந்ததுடன் முதலாவது பகுதியில் போன்ற பரபரப்பு இருக்கவில்லை.

போட்டியின் 71ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் கழகத்துக்கு கிடைத்த 25 யார் தூர ப்றீ கிக் மூலம் நிரேஷ் சுந்தரராஜ் தனது 3ஆவது கோலைப் போட்டார். ப்றீ கிக்கை செரெண்டிப் கோல்காபாளர் மொஹமத் முறையாக தடுக்காததால் அவரது கைகளுக்குள்ளாக கோலினுள்  பந்து  புகுந்தது.

7 நிமிடங்கள் கழித்து செரெண்டிப் சார்பாக அசன்டே இவான்ஸ் ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார். இந்த சுற்றுப் போட்டியில் இவான்ஸ் போட்ட 7ஆவது கோல் இதுவாகும்.

உபாதையீடு நேரத்தில் வலதுபுறத்திலிருந்து சஞ்சுல ப்ரியதர்ஷன உயர்வாக பரிமாறிய பந்தை மாற்றுவீரர் நாலக்க கன்னங்கர தலையால் கோலை நோக்கி முட்டினார். அதனை நிஷான் ஜீவன்த திசை திருப்பியபோதிலும் பந்து கோல் கொட்டை கடந்து சென்றதாக உதவி மத்தியஸ்தர் சமிக்ஞை கொடுக்க கள மத்தியஸ்தர் ஏ.எம். ஜப்ரான் அதனை கோலாக அங்கீகரித்தார்.

வெற்றிதோல்வி இல்லை

குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற நாவாந்துறை சென் மேரிஸ் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போட்டியின் முதலாவது பகுதியில் எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.

இடைவேளையின் பின்னர் 54ஆவது நிமிடத்தில் கோர்ணர் கொர்ணர் கிக்கைப் பயன்படுத்தி அணித் தலைவர் மரியதாஸ் நிதர்ஷன் தலையால் முட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

எனினும் 71ஆவது நிமிடத்தில் நதீக்க புஷ்பகுமார கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தனர்.

85ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் கழகத்தின் முயற்சி நூலிழையில் தவறியது. அதன் பின்னர் மேலதிக கோல் போடப்படாமல் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

நிகம்போ யூத் வெற்றி

காலி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் கழகத்தை 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் நிகம்போ யூத் வெற்றிகொண்டது.

ஆரம்பம் முதல் கடைசி வரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியின் இடைவேளையின்போது 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் நிகம்போ யூத் முன்னிலையில் இருந்தது.

நிகம்போ யூத் சார்பாக அன்தனி ஐக்வெக்போ (26 நி., 45-2 நி.) 2 கோல்களையும் மூத்த வீரர் கிறிஸ்டீன் பெர்னாண்டோ (85 நி.) ஒரு கோலையும் போட்டனர்.

கிறிஸ்டல் பெலஸ் சார்பாக பாசித் அஹ்மத் (35 நி.), ஜமோ இப்ராஹிம் (48 நி.) ஆகியோர் கோலகளைப் போட்டனர்.

மாத்தறை சிட்டிக்கு 4ஆவது வெற்றி

மொரகஸ்முல்ல கழகத்துக்கு எதிராக மாத்தறையில் நடைபெற்ற போட்டியில் 2 - 1 என்ற கோல்கள அடிப்படையில் மாத்தறை சிட்டி வெற்றிபெற்றது.

இது மாத்தறை சிட்டி ஈட்டிய நான்காவது தொடர்ச்சியான வெற்றியாகும். இந்த வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள மாத்தறை சிட்டி அணிகள் நிலையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் முதல் 18 நிமிடங்களில் 3 கோல்கள் போடப்பட்ட போதிலும் அதன் பின்னர் இரண்டு அணிகளினாலும் கோல் போட முடியாமல் போனது.

போடு பிறின்ஸ் (8 நி.), அவின் கவிஷ்க (11 நி.) ஆகியோர் மாத்தறை சிட்டி சார்பாக கோல்களைப் போட்டனர்.

மொரகஸ்முல்ல சார்பாக எரந்த ப்ரசாத் (18 நி.) கோல் ஒன்றைப் போட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right