எரிபொருள் கப்பல்களின் வருகை மேலும் தாமதமாகும் : வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - காஞ்சன விஜேசேகர

25 Jun, 2022 | 07:53 PM
image

(எம்.மனோசித்ரா)

பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் இரண்டு கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் , அவற்றின் வருகை மேலும் தாமதமடையும் என்று வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

குறித்த கப்பல்களின் வருகை தொடர்பில் தன்னால் இதற்கு முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்பிற்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது :

நாட்டுக்கு கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரவிருந்த பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் ஒரு நாள் தாமதமாகி நாட்டை வந்தடையும் என்று இறக்குமதி நிறுவனத்தினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினையே நானும் கடந்த வியாழனன்று வெளியிட்டிருந்தேன்.

எனினும் குறித்த கப்பல்கள் நாட்டை வந்தடைவதற்கு மேலும் கால தாமதமாகும் என்று பின்னரே அறிவிக்கப்பட்டது. 

எனவே எரிபொருள் கப்பல் குறித்து முன்னர் வழங்கிய அறிவிப்பிற்காக மன்னிப்பு கோருகின்றேன். கப்பல்கள் வருகை தரும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதேவேளை சுகாதார உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 'சுகாதார சேவைகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு 84 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு தலா 6600 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பன வழங்கப்பட்டுள்ளன. சுகாதார சேவையினருக்கு வழங்கப்படக் கூடிய எரிபொருளின் அளவு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் மேற்குறிப்பிட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு ஓரளவிற்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருந்த போதிலும் , தற்போது கப்பல்கள் வரும் தினத்தை அறிவிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

நீண்ட நாட்களாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தும் , அதனைப் பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் , தொடர்ந்தும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right