இலங்கையில் கொண்டாடப்பட்ட ஒலிம்பிக் தினம்

25 Jun, 2022 | 03:10 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் தினம் உலக அமைதிக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

பகிர்வு, நட்புறவு, முயற்சியில் வெற்றி, எப்போதும் அதிசிறந்தவற்றை செய்தல் ஆகிய அம்சங்களையும் ஒலிம்பிக் தினம் எடுத்துக்காட்டியது.

மிக எளிமையாக ஆனால், அமைதியின் தேவையை உலகுக்கு ஆணித்தரமாக வலியுறுத்தும் வகையில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரன் பியரே டி கூபேர்ட்டினின் அயரா முயற்சியால் நவீன ஒலிம்பிக் அமைப்பு 1894ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. அவர் ஒலிம்பிக் அமைப்பை மேம்படுத்த விரும்பினார். அத்துடன் நவீன ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பிப்பதிலும் கடுமையாக உழைத்தார்.

அவரது அயரா முயற்சியின் பலனாக இரண்டு வருடங்கள் கழித்து பண்டைய ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் தாயகமான ஏதென்ஸ் நகரில் 1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா அரங்கேற்றப்பட்டது.

நவீன ஒலிம்பிக் உதயமாகி 51 வருடங்களின் பின்னர் ஸ்டொக்ஹோமில் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 41ஆவது பொதுச் சபை அமர்வின்போது, ஒலிம்பிக்கின் சிறப்பியல்புகளை ஊக்குவிக்கும் வகையில் உலக ஒலிம்பிக் தினம் பற்றிய திட்ட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை செக்கோஸ்லோவாக்கியாவின் சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டொக்டர் க்ரஸ் சமர்ப்பித்தார்.

சில மாதங்களின் பின்னர் சுவிட்சர்லாந்தின் சென். மோரிட்ஸ் நகரில் 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 48ஆவது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பொதுச் சபை அமர்வின்போது அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கு அமைய அப்போது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக இருந்த சிக்ஃப்ரிட் எட்ஸ்ரோம் தலைமையில் அங்குரார்ப்பண ஒலிம்பிக் தினம் 1948 ஜூன் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மக்களை ஊக்குவிக்கவும் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் ஒலிம்பிக் தினம் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒலிம்பிக்கின் பெறுமதிகளான மேன்மை, மரியாதை, நட்பு ஆகியவை தொடர்பாக  ஒலிம்பிக் தினம்   முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தப் பெறுமதிகளை மக்கள் உள்வாங்குவதற்கு இந்தத் தினம் வழிகாட்டியாக திகழ்கிறது.

74ஆவது ஒலிம்பிக் தினம்  இலங்கையில்   அண்மையில் நடத்தப்பட்டபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவேர்ட்டு,

'நாங்கள் இன்று பிரான்சிலிருந்து 10,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கை தேசிய ஒலிம்பிக் இல்லத்தல் கூடியுள்ளோம். நவீன ஒலிம்பிக்கின் தந்தை பாரன் பியரே டி கூபேர்ட்டின் மறைந்து 85 வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கையில் ஒலிம்பிக் தினத்தை நாம் கோண்டாடுவோம் என கூபேர்ட்டின் அப்போது கற்பனை செய்திருப்பாரா என கேட்கத் தோன்றுகிறது.

'ஆனால், அவரது எண்ணங்கள் உண்மையில் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அவர் ஊக்குவிக்க விரும்பிய விளையாட்டின் பெறுமதிகள் உலகலாவியவை மட்டுமல்ல காலத்தால் அழியாதவையும் ஆகும். பகிர்தல், நட்புறவு, முயற்சியில் மகிழ்ச்சி, எப்போதும் உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தல் ஆகியன வாழ்க்கையில் முக்கியமானவை.

'இந்த சந்தர்ப்பத்தில்  லண்டன் 1948 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் டன்கன் வைட்டும் சிட்னி 2000 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசன்திகா ஜயசிங்கவும் வெள்ளிப் பதக்கங்களை வென்றமை குறித்து எனது பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றேன்.

'ஆனால், டோக்கியோ 1964 ஒலிம்பிக்கில் ரணதுங்க கருணாநந்த 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியை  கடைசிவரை விடாமுயற்சியுடன்   ஓடி     நிறைவு செய்தமை அதற்கும் மேலானது என கருதுகின்றேன். ஒலிம்பிக் கோட்பாடுகளில் ஒன்றான 'வெற்றிபெறுவதைவிட பங்குபற்றுவதே சிறப்பு வாய்ந்தது' என்பதை அவர் தனது விடாமுயற்சியின் மூலம் முழு உலகுக்கும் எடுத்துக்காட்டினார். அதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் வைராக்கியம் மிக்க தோல்வியாளர் என அவர் அழைக்கப்பட்டார்' என்றார்.

பிரான்ஸ் ஒலிம்பிக் 2024

இலங்கைக்கு உதவத் தயார்

பிரான்ஸில்  இன்னும் இரண்டு வருடங்களில்   நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து அதிகளவிலான போட்டியாளர்களை வரவேற்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டார்.

'பொதுநலவாய விளையாட்டு விழா வெகு விரைவில் நடைபெறவிருப்பதை நான் அறிவேன். அவ்விழாவில் பங்குபற்றும் இலங்கை வீரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவேண்டும் எனவும் சிறப்பாக போட்டியிடவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். ஆனால், பாரிஸ் 2024 ஒலிம்பிக்  விளையாட்டு விழாவையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ் விளையாட்டு அற்புதமானதாகவும் தனித்தும் மிக்கதாகவும் இருக்கும் என நம்புகிறேன். கோடைக்கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்ப விழா வைபவம் பிரதான அரங்குக்கு வெளியில் நடைபெறவுள்ளது.

'இவ்விளையாட்டு விழா பகிர்வு, மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றின் தருணமாக இருக்கும் என நான் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் நம்புகிறேன். இவ்விழாவில் அதிகளவிலான இலங்கை வீரர்களை வரவேற்க காத்திருக்கிறேன். அதற்காக நாங்கள் குறிப்பாக நான் உதவத் தயாராக இருக்கிறேன்.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை வெகுவிரைவில் நீங்கி, அமைதி ஏற்பட்டு நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வாழ்க்கையையும் விளையாட்டையும் ரசிக்கவும் ஒலிம்பிக் இயக்கத்தின் பெறுமதிகளை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும் என விரும்புகிறேன்' என பிரான்ஸ் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

ஒற்றுமையின் அவசியம்

ஒலிம்பிக் தின வைபவத்தில் உரையாற்றிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் மனிதகுலத்திற்கான தலைமுறையினரை கட்டியெழுப்ப அனைவரரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.

'நவீன ஒலிம்பிக்கின் மகத்துவத்தை கொண்டாடும் வகையில் இந்த இடத்தில் நாம் கூடியுள்ளோம். ஒலிம்பிக் கோட்பாடுகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒற்றுமை என்ற சொல், மேன்மை அடைவது, வேகம், ஒன்றிணைதல் ஆகியவற்றை வரையறுத்து நிற்கிறது.

'விளையாட்டுத்துறை மற்றும் ஒலிம்பிஸம் ஊடாக ஒற்றுமையை அடையவும் சிறந்த இலங்கையை நோக்கி நகரவும் நாம் கடுமையாக முயற்சித்துவருகிறோம். விளையாட்டின் மூலம் இந்த உலகை ஓர் சிறந்த இடமாக மாற்றுவதற்கு ஒற்றுமை உந்துசக்தியாக இருக்கிறது என்ற ஒலிம்பிக்கின் ஆரம்ப கோட்பாட்டை சரவ்தேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பாக் விபரித்துள்ளார். ஒற்றுமையாக இருந்தால்தான் நம்மால் விரைவாக நகரவும் உயர்ந்த இலக்கை அடையவும் பலசாலிகளாகவும் ஆக முடியும்' என தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தனது உரையில் தெரிவித்தார்.

'கலாசாரத்தையும் விளையாட்டையும் இணைக்கும் செயல்பாட்டின் மூலம் ஒலிம்பிஸம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தக் கட்டத்தில் மனித நேயத்தை கட்டியெழுப்புவதற்காக செயல்படுவதும் எமது செயல்பாட்டின் மூலம் மனிதநேயத்தை அடைந்து சகலருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதுமே தேசிய ஒலிம்பிக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

'எனவே,  மனிதநேயத்திற்கான தலைமுறையினரை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் சகல தேசிய விளையாட்டுத்துறை சம்மேளனங்களையும் பங்குதாரர்களையும் ஒன்றிணையுமாறு வேண்டுகின்றேன்' எனவும் சுரேஷ் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின்போது சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பாக்கின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டது.

அதில், 'உலக அமைதிக்காக நாம் ஒன்று சேர்ந்து வேகமாக நகரவும் உயர்ந்த இலக்கை அடையவும் பலசாலிகள் ஆகவும் கடுமையாக முயற்சிப்பதற்கு ஒலிம்பிக் ஆர்வம் எம்மை வழநடத்துகிறது.

'அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் என ஒலிம்பிக் தினத்தில் நாம் விடுக்கும் அழைப்பை ஏற்று எங்களுடன் சேருங்கள்' என அந்த உரையில் தோமஸ் பாக் குறிப்பிட்டார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் தாழ்வு

நிகழ்ச்சியின் நிறைவில் நன்றியுரை நிகழ்த்திய தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் தாழ்வு' என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்.

'நாம் அனைவரும் இக்கட்டான சூழ்நிலையை அனுபவதித்து வருகின்ற இவ்வேளையில், விளையாட்டு வீரர்கள், இருபாலாரிலும் இளம் மற்றும் மூத்த அதிகாரிகள், சிறுவர்கள் ஆகியோரை நாங்கள் இங்கு ஒன்று சேர்த்ததன் மூலம் எம்மால் சாதிக்க முடியும் என்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளோம்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

 தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா

ஒலிம்பிக் தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒலிம்பிக் தீபமேற்றலுடன் ஆரம்பமானது. ஒலிம்பிக் தீபத்தை தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவேர்ட்டு ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

அங்கிருந்து ஒலிம்பிக் இல்லத்தை நோக்கிய ஒலிம்பிக் தீப பவனியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசன்திகா ஜயசிங்க, ஒலிம்பிக் பட்மின்டன் வீரர் நிலூக்க கருணாரட்ன, விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் அநுராத விஜேக்கோன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக் குழு அதிகாரிகளால் நிரந்தர புதிய இலச்சினை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

ஒலிம்பிக் இல்ல வளாகத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தின்போது ஏழ்மையிலும் ஏழ்மையான 5 குடும்பங்களுக்கு தேசிய ஒலிம்பிக் குழுவினால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

இதேவேளை, காலையில் நடைபெற்ற இணையவழி ஒலிம்பிக் பெறுமதிகள் தொடர்பான புதிர் போட்டியில் 275 பேர் கலந்தகொண்டதுடன் அவர்களில் மூவர் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

முதலாவது பரிசை ராகுல் ஜெயநாதன் வென்றெடுத்தார். இரண்டாவது பரிசை அக்கர்ஷனா பிரேம்குமாரும் லெமுவல் பத்மபுவனேந்திரனும் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில் ஒலிம்பிக் தினம் முதன் முதலில் இரத்தினபுரியில் 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து யாழ்ப்பாணம் (2010), வவுனியா (2011), கொழும்பு (2012), ஏராவூர் (2013), கொழும்பு (2014), மன்னார் (2015), காலி (2016), அம்பாறை (2017), நுவரெலியா (2018), மாத்தறை (2019), ஒலிம்பிக் இல்லம் - இணையவழி (2021), கொழும்பு (2022) ஆகிய இடங்களில் ஒலிம்பிக் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22