(ஆர்.ராம்)

அரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கும் எமக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றதா என்பதை அவதானிப்பதற்கு  தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்தும் பொறிமுறையொன்றை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தலைவர் ஜேன் லெம்பர்ட் தலைமையில் சஜ்ஜாட் கரிம், தோமஸ் மென், உலரிக் முல்லர் ஆகியோர் தலைமையிலான குழுவினரும் எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.  

அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துவெளியிடுகையில்,

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நாம் அவர்களிடத்தில் வலியுறுத்தினோம். 

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கச்செயற்பாடுகள், புதிய அரசியலமைப்புத் திருத்தம் எனப் பல்வேறு வாக்குறுதிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய  வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். 

இலங்கை புதிய திசையொன்றை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை ஏற்கின்றோம். எனினும், இது எந்தளவு தூரம் சரியாக செல்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும்.