மத்திய வங்கி ஆளுநரை  நீக்கினால் அரச எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தீவிரமடையும் - ஜனாதிபதி, பிரதமருக்கு ஆளும் கட்சி உறுப்பினர் கடிதம்

By T. Saranya

25 Jun, 2022 | 01:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல்வாதிகளை காட்டிலும் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்களின்  நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறுப்பட்ட எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களினால் அங்கிகரிக்கப்பட்டு, நம்பிக்கை கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கினால் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மீண்டும் தீவிரமடையும்.

நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றும் வாய்ப்பை மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்க வேண்டும்.

ஆளுநரை பதவி நீக்க ஏதேனும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தி பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகியுள்ள செய்தி அவதானத்திற்குரியன. இந்த செய்தி உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது இரண்டாம் பட்சமாகவே ஆராயப்படும்.

இந்த செய்தியை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் எடுக்கும் தீர்மானம் தற்போதைய நெருக்கடி நிலைமையினை மேலும் தீவிரப்படுத்தும்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் தூரநோக்கமற்ற வகையில் முன்னெடுத்த தீர்மானங்கள் தற்போதைய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.அத்துடன் அரசியல்வாதிகளின் தூரநோக்கமற்ற செயற்பாடுகளும் பொருளாதார நெருக்கடிக்கு பிறிதொரு காரணம் என மக்கள் கருதுகிறார்கள். 

அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில் மக்களின் நம்பிக்கை நம்பிக்கை மற்றும் அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட போது மக்களின் நம்பிக்கை,திறமை மற்றும் தொழிற்துறை தகைமை ஆகியவற்றை கொண்டுள்ளவராக கருதப்பட்டு கலாநிதி நந்தலால் வீரசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறுகிய காலத்தில் முன்னேற்றகரமான தீர்மானங்களை செயற்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது. நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பினை ஏற்க அரச அதிகாரியின் கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரச கட்டமைப்பில் தீர்மானங்கள் முன்னெடுப்பது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை மேலும் வலுப்படுத்தும்.

மக்கள் மத்தியில் தற்போது அரசியல்வாதிகளை காட்டிலும் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்களின்  நம்பிக்கை சிதைவடைந்துள்ள நிலையில் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறுப்பட்ட எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களினால் அங்கிகரிக்கப்பட்டு, நம்பிக்கை கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கினால் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மீண்டும் தீவிரமடையும்.

நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றும் வாய்ப்பை மத்திய வங்கியின் ஆளுநருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.ஆளுநரை பதவி நீக்க ஏதேனும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right