இன்றைய போட்டியில் 'இரட்டை' வெற்றியை பெற்ற அவுஸ்திரேலியா : கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை !

24 Jun, 2022 | 10:21 PM
image

(ஆர்.பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற 5ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 'இரட்டை' வெற்றியை ஈட்டியது.

போட்டியில் 4 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, அரங்கில் மஞ்சள் ஆடைகளுடன் குழுமியிருந்த ரசிகர்களின் மனங்களையும் வெற்றிகொண்டு 'இரட்டை' வெற்றியைப் பூர்த்திசெய்தது.

இப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதும் அரங்கில் ஒஸ்ட்ரேலியா, ஒஸ்ட்ரேலியா என்ற குரல்கள் ஓங்கி ஒலித்ததுடன் ஆரவாரத்துடன் கரகோஷமும் எழுப்பப்பட்டது.

பதிலுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியினர் அரங்கை சுற்றிவந்து கைகளை அசைத்து ரசிகர்களுக்கு நன்றி கூறினர்.

அது மட்டுமல்லாமல் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வருகை தந்த முழு அளவிலான அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி பாராட்டும் வகையில் அரங்குக்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கவைக்கப்பட்டன. 

இந்தப் போட்டி முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 2 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இலங்கை கைப்பற்றியது. 

எவ்வாறாயினும் 4ஆவது போட்டி முடிவுடன் தொடரை இலங்கை தனதாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியில் இலங்கையைப் போன்றே அவுஸ்திரேலியாவுக்கும் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

இரண்டாவது ஓவரில் மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் டேவிட் வோர்னர் (10) களம் விட்டகன்றார்.

தீக்ஷனவன் பந்துவீச்சில் ஜொஷ் இங்லிஸ் (5) 3ஆவதாக ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து மிச்செல் மார்ஷ், மார்னுஸ் லபுஸ்சான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்களைத் தக்கவைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஓட்டங்களைப் பெற்றவண்ணம் இருந்தனர்.

எனினும் மொத்த எண்ணிக்கை 50 ஓட்டங்களாக இருந்தபோது அறிமுக வீரர் ப்ரமோத் மதுஷானின் பந்துவீச்சில் மிச்செல் மார்ஷ் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து   லபுஸ்சான், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 5 ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 101 ஓட்டங்களாக உயர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் வெல்லாலகேயின் பந்துவீச்சில் லபுஸ்சான் ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 20 ஓட்டங்கள் சேர்ந்தபோது க்ளென் மெக்ஸ்வெல்லின் விக்கெட்டை வெல்லாலகே நேரடியாக பதம் பார்த்தார். இந்த 20 ஓட்டங்களில் மெக்ஸ்வெலின் பங்களிப்பு 16 ஓட்டங்களாக இருந்தது.

எவ்வாறாயினும் ஒரு பக்கத்தில் நிதானத்தை இழக்காமல் துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் கேரி தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அலெக்ஸ் கேரி 65 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 26 பந்துகளில் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 43.1 ஓவர்களில் சகல விக்கெட்களையம் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களிடம் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் நால்வரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை நெருங்கவில்லை.

சாமிக்க கருணாரட்ன அரைச் சதம் குவித்ததால் இலங்கை ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

தனது 18ஆவது போட்டியில் விளையாடிய சாமிக்க கருணாரட்ன இப் போட்டியில் கன்னி அரைச் சதம் குவித்து   அணியை பெரு வீழ்ச்சியிலிருந்து மீட்டார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்படடன. நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தனுஷ்க குணதிலக்க, தினேஷ் சந்திமால், வேகப்பந்துவீச்சாளர் ப்ரமொத் மதுஷான் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலய அணியில் உபாதைக்குள்ளான ட்ரவிஸ் ஹெட்டுக்கு பதிலாக ஜொஸ் இங்லிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை மந்த கதியில் ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, விக்கெட்களையும் இழந்த வண்ணம் இருந்தது.

25ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் இலங்கை 100 ஓட்டங்களை நெருங்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

தனுஷ்க குணதிலக்க (8), பெத்தும் நிஸ்ஸன்க (2), தினேஷ் சந்திமால் (6), கடந்த போட்டியில் சதம் குவித்த சரித் அசலன்க (27 பந்துகளில் 14), குசல் மெண்டிஸ் (40 பந்துகளில் 26), அணித் தலைவர் தசுன் ஷானக்க (1), துனித் வெல்லாலகே (4), ஜெவ்றி வெண்டர்சே (4) ஆகிய 8 வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

இந் நிலையில் சாமிகக கருணாரட்னவுடன் இணைந்த ப்ரமோத் மதுஷான் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 9ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்கள் பகிரப்படுவதற்கு உதவினார்.

மறுபக்கத்தில் சாமிக்க கருணாரட்ன ஆரம்பத்தில் நிதானமாகவும்  பின்னர் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி அணிக்கு தெம்பூட்டினார்.

மொத்த எண்ணிக்கை 143 ஓட்டங்களாக இருந்தபோது மதுஷான் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற போதிலும் சாமிக்க கருணாரட்ன அரைச் சதம் குவிப்பதற்கு மிகவும் ஒத்தாசையாக துடுப்பெடுத்தாடியிருந்தார்.

75 பந்துகளை எதிர்கொண்ட சாமிக்க கருணாரட்ன 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டமிழந்தார்.

மஹீஷ் தீக்ஷன 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right