(ஆர்.யசி)

இலங்கைக்கு ஜி. எஸ்.பி வரிச்சலுகையை வழங்க  முன்னதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டில் நல்லிணக்க பொறிமுறைகளை நிலைநாட்டுவது, மனித உரிமைகள், மீள் நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் கொடுத்த   வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து சரியாக அவதானிக்க வேண்டும் என  இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய  பாராளுமன்ற தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

ஜி. எஸ்.பி வரிச்சலுகையை  இலங்கைக்கு மீண்டும் வழங்குவதை நாம் வரவேற்கின்றோம் எனவும் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ  விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர்  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதான தரப்புகளை சந்திக்கவில்ல நிலையில் இன்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தனர். 

ஜேன் லம்பர்ட் தலைமையிலான நால்வர் அடங்கிய இத்தூதுக்குழு வினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான  விசேட சந்திப்பு  இன்று  காலை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.