முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் 'மிடில் கிளாஸ்'

By Vishnu

24 Jun, 2022 | 05:21 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் படத்திற்கு 'மிடில் கிளாஸ்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மிடில் கிளாஸ்'. இதில் நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி அகத்தியன் நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, மாளவிகா அவினாஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரைஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். 'மரகத நாணயம்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சிலர்' போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டில்லிபாபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதற்கான தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' நடுத்தர வர்க்க குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படமாக 'மிடில்கிளாஸ்' உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.'' என்றார்.

நகைச்சுவை நடிகர்கள் கதையின் நாயகர்களாக அறிமுகமாகும் இந்த காலகட்டத்தில், அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் நடிகர் முனீஷ்காந்த்தும் வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right