(பா.ருத்ரகுமார்)

தகவலறியும் சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பிரயத்தனங்கள் பாராட்டுக்குறியது என ஐக்கிய அமெரிக்கா நீதித்துறை திணைக்களத்தின் தகவல் கொள்கை தொடர்பான பணிப்பாளர் மெலேனி புஸ்டே தெரிவித்தார். 

மேலும் இச்சட்டத்தின் உண்மையான தாட்பரியங்களை உணர்ந்துக்கொள்ள சிறிது காலம் தேவைப்படுமாயினும் அதன் பலாபலன்களை அடைய செய்வதற்கு ஐக்கிய அமெரிக்கா தொடந்து உதவிகளை வழங்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் தகவலறியும் சட்டமூலம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள் மிகவும் நேர்த்தியாக எடுத்துச்செல்லப்படுகின்றமையை நான் அவதானித்தேன். அமெரிக்காவை பொருத்தமட்டில் இச்சட்டத்தை அமுல்படுத்தும் போது பாரிய இடையூறுகளை சந்தித்தோம். ஆனால் மக்களுக்கு முறையான தெளிவுப்படுத்தல்களையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் போது இச்சட்டத்தின் பலாபலன்களை மக்களுக்கு இலகுவில் கொண்டு சேர்க்க முடியும்.

இச்சட்டமூலத்தை அமுல்ப்படுத்துவதில் இலங்கை அவதானமாக செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் முகமாகவே நாம் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். அதனடிப்படையில் இச்சட்டத்தை அமுல்படுத்தும் போது அதனுடன் அரச நிறுவனங்கள் பலரும் இணைந்துக்கொள்ளும். 

அவ் அரச நிறுவனங்களுக்கிடையிலான தெளிவான வரையறை மற்றும் தகவல்கள் தொடர்பிலான வெளிப்படைத்தன்மை எவ்வாறானது என்பது தொடர்பில் முதலில் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். தனியாளின் சுயநலனுக்காகவோ அல்லது தேவைக்காகவோ நாம் அரச மற்றும் தேசிய ஆவணங்களை வெளியிட முடியாத நிலை உள்ளது. அவ்வரையறையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்தோடு இலங்கை பல்லின மக்கள் வாழும் சமூகம் என்ற வகையில் இச்சட்டமூலத்தின் ஊடுறுவல் தெளிவான திசையை நோக்கி பிரயாணிக்க வேண்டிய அவசியப்பாடு காணப்டுகின்றது. தகவல்கள் எந்தவொரு சமூகத்தையும் குழுக்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். அப்போதே மக்கள் இச்சட்டட்டத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள் என்றார்.