பொருளாதார நிலைமை மனிதஉரிமை நிலவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடாது

--

இலங்கையின் மிகவும் சவாலான பொருளாதார நிலைமை மனிதஉரிமை நிலவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் பிரிவுகள் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் நிபந்தனைகளை விதிப்பதற்கு அனுமதிக்கின்ற போதிலும் சர்வதேச நாணயநிதியத்தின் செயற்பாடுகளில் அரசியல் அல்லது மனித உரிமை தொடர்பான நிபந்தனைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாங்கள் சர்வதேச கடன் மன்றங்களின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாங்கள் இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணமுயல்வோம் என தெரிவித்துள்ள விக்கிபோர்ட் அதேவேளை மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை மன்றங்களிலும் பரப்புரை செய்வோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினமான மனித உரிமை நிலவரத்தையும்,யுத்தத்திற்கு பிந்திய பொறுப்புக்கூறலிற்கு போதியளவு பொறுப்புக்கூறப்படாமையையும் பிரிட்டன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது,எனவும் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மிகவும் சவாலான பொருளாதார நிலைமை மனிதஉரிமை நிலவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் இலங்கை ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.