இலங்கையின் பொருளாதார நெருக்கடி : பிரிட்டனின் பிரபல இராஜதந்திரி சர்வதேச நாணய நிதியத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

By T Yuwaraj

24 Jun, 2022 | 04:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதற்கான காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கும் பிரிட்டனைச்சேர்ந்த பிரபல இராஜதந்திரியான மார்க் மெலோச்-பிரவுன், இல்லாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் உதவிகள் தேவைப்படும் மக்களுக்குப் பதிலாக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் விழப்போகின்றது - பொருளாதார நிபுணர்கள்  எச்சரிக்கை | Virakesari.lk

இலங்கையைச் சேர்ந்த பொருளியல் நிபுணரும், பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் 'வெரிட்டே ரிசேர்ட்' என்ற அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான நிஷான் டி மெல் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

'இலங்கையில் இடம்பெற்றுவந்த திட்டமிடப்பட்ட ஊழல்மோசடிகள் தற்போதைய கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன.

ஊழல் மிகுந்த அரச நிர்வாகம் இதற்குப் பிரதான காரணமாகும். இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டின் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமா?' என்று அவர் அப்பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பதிவை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மார்க் மெலோச்-பிரவுன் மேற்குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க ஜனநாயகத்தன்மை வாய்ந்த அரசாங்கங்களை உருவாக்குவதை முன்னிறுத்தி செயற்படும் 'ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷனின்' தலைவரும் முக்கிய பல கட்டமைப்புக்களில் பதவி வகித்தவருமான மார்க் மெலோச்-பிரவுன் இலங்கை தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது:

உதவிகளைத் திசைதிருப்பிய வரலாறு இலங்கைக்கு உண்டு. எனவே இலங்கை ஏன் இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்பதற்கான காரணத்தை சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இலங்கைக்கான தமது விஜயத்தின்போது ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டும்.

இல்லாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் நெருக்கடிக்கு உள்ளாகி உதவிகள் தேவைப்படும் நிலையில் இருக்கும் மக்களுக்குப் பதிலாக, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு உதவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right