Published by T. Saranya on 2022-06-24 11:49:05
யாழ்ப்பாணம் பருத்தித்துறைசாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தமது பஸ்களை, பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் எமக்கு உரிய ஒழுங்குமுறைகளில் பருத்தித்துறை சாலை (டிப்போ) முகாமையாளர் டீசலை விநியோகிக்கவில்லை. இரவு நேரங்களில் கள்ள சந்தை வியாபாரிகளுக்கு பெருமளவான டீசல் வழங்கப்படுகின்றது.
பயணிகள் சேவையில் ஈடுபடும் எமக்கு டீசல் வழங்க இழுத்தடிப்புகள் செய்து உரிய ஒழுங்கில் டீசல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமக்கு டீசல்கள் வழங்கப்படுவதில்லை என தனியார் பஸ் சாரதிகள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.

அவர்களுடன் யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் பேச்சுக்களை நடாத்தி உரிய ஒழுங்கில் டீசல் பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்து இருந்த நிலையில், பருத்தித்துறைசாலைக்கு (டிப்போ) எதிராக போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.