வைத்தியசாலைகளில் தற்பொழுது விலங்கு மற்றும் விசர் நாய் கடிகளுக்கான தடுப்பு மருந்து வகைகள் இன்மையால் மடு பெருவிழாவுக்கு வருவோரின் பாதுகாப்பு கருதி நாய்கள் அப்பகுதிக்குள் உலாவுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஆடி மாத மடு பெருவிழா தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அன்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆடி மாத மடு அன்னை பெருவிழாவுக்கு இம்முறை கட்டுப்பாடு அற்ற முறையில் பக்தர்கள் வருகை தர இருக்கின்றார்கள்.

இம் மடுப் பகுதி ஒரு கானகப் பகுதியாக இருப்பதால் மக்களும் இப் பகுதிக்கு வருகை தரும்போது கட்டாக்காலி நாய்களும் காட்டுப் பகுதிகளுக்குள் இருந்து வருகை தரக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆகவே தற்பொழுது வைத்தியசாலைகளில் விலங்கு மற்றும் விசர் நாய் கடிகளுக்கான தடுப்பு மருந்து வகைகள் இன்மையால் நாய் தொல்லைகளிலிருந்து இப்பகுதிக்கு வரும் மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.