யார் இந்த மெஸ்ஸி.... ? இன்று பிறந்தநாள் !

By T. Saranya

24 Jun, 2022 | 04:46 PM
image

விளையாட்டுக்களிலேயே கால்பாந்தாட்டத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம். அதிலும் கால்பந்தாட்ட மைதானத்தில் ஒருவர் நுழையும் போது எழுகின்ற ஆரவாரங்களும், கோஷங்களையும் அரங்கையே அதிரவைக்கிறது என்றால் அந்த நபரின் ஜெர்சியின் பின்புறத்தில் 10 என்று போடப்பட்டிருக்கும்.

கால்பந்தாட்டத்தில் 10 என்றாலே அது அவர் தான். கால்பந்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு இவரைத் தெரியாமல் இருக்க முடியாது.

அந்த பெயர் தான் லியோனல் மெஸ்ஸி. சிறந்த கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி தான் இன்றைய தினத்தின் கதாநாயகர்.

உலகின் சிறந்த கால்பந்து வீரராக தனக்கென்றவொரு தனி அத்தியாயத்தையே உருவாக்கியுள்ள மெஸ்ஸி அடித்த கோல்களும், அடைந்த சாதனைகளும், வாங்கி குவித்த விருதுகளும் எத்தனை எத்தனையோ.

சிறுவயதிலேயே ஹோர்மோன் குறைபாட்டினால் வளர்ச்சி குறைவாக குள்ளமாக இருந்தாலுமே இந்தக் குள்ளர் தொட்ட உயரங்களை யாராலும் எட்டக்கூட முடியவில்லை. 

சிறந்த கால்பந்து வீரருக்காக சர்தேச கால்பந்து சம்மேளனத்தால் வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படும் BALLON D'OR விருதை ஐந்து முறைவென்ற கால்பந்தாட்ட உலகின் மற்றுமொரு ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு சரிக்கு சமனாக வென்ற மெஸ்ஸி கடந்த இரு ஆண்டுகளும் BALLON D'OR விருதை வென்று முன்னணியிலிருக்கிறார்.

600 இற்கும் மேற்பட்ட கோல்கள், எக்கச்சக்கமான விருதுகள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என கால்பந்தாட்ட உலகில் அசைக்கமுடியாதளவிற்கு தன்னுடைய பெயரை பதித்துள்ள லயோனல் மெஸ்ஸி இத்தனை சாதனைகளையும், சாகசங்களையும் புரிந்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் அவருடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

வலிகளும், தோல்விகளும் நிறைந்த லயோனல் மெஸ்ஸியினுடைய வாழ்க்கையை நிச்சயம் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டும்.

யார் இந்த மெஸ்ஸி.... ?

1987 ஜூன் 24. தாயின் வயிற்றை எட்டி உதைத்து பிறந்த ஒரு குழந்தை பின்னாளில் உதைப்பந்தாட்டத்தின் சரித்திர நாயகனாய் உலகை வலம்வரும் என்பது அப்போது அந்த பெற்றோருக்கு தெரியாது.

ஆர்ஜென்டினாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு பெற்றோர் லயோனல் மெஸ்ஸி என்று பெயர் வைத்து அழைத்தனர்.

சிறுவயதிலிருந்தே  மெஸ்ஸிக்கு கால்பந்தாட்டம் விளையாடுவதில் தான் ஆர்வம் அதிகம்.

அதற்கு ஏற்றவாறே தனித்துவமான திறமையும் அவருள் காணப்பட்டது. மெஸ்ஸியின் கால்பந்தாட்டத்திறமையைக் கண்டறிந்து அதனை விளையாடக் கற்றுக்கொடுத்தவர் அவருடைய தந்தை தான்.

தன்னை விடப் பெரியவர்களுடன் தான் பிறந்த நகரிலேயே கால்பந்தாட்டம் விளையாடிவந்த மெஸ்ஸிக்கு Newell's Old Boys  இல் விளையாடும் வாய்ப்பு சிறுவயதிலேயே கிடைத்தது.

500 இற்குமேற்பட்ட கோல்களை அடித்துகொடுத்து அந்த அணிக்காக ஆறு வயதிலிருந்து விளையாடி இருக்கிறார் மெஸ்ஸி.

இப்படி சிறுவயதிலேயே கால்பந்தாட்டத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கும் வேளை ஒரு சோகம் அவரை சூழ ஆரம்பித்தது.

வயது வளர்ந்தாலுமே மெஸ்ஸியின் உருவமும்,உயரமும் வளரவில்லை. ஹோர்மோன் குறைபாட்டினால் மெஸ்ஸியின் உடல் வளர்ச்சி குன்றியது.

பார்ப்பதற்கு குள்ளமாக இருந்தமை மற்றவர் கண்களுக்கு மெஸ்ஸியை கேலிப்பொருளாக மாற்றியது. கால்பந்தாட்ட வீரராக வேண்டுமென்ற கனவோடு வாழும் மெஸ்ஸியின் உடல் வளர்ச்சி சீரடைய மாதம் 900 டொலர்கள் செலவழிக்கவேண்டும்.

இதற்கு போதிய பணம் பெற்றோரிடம் இல்லாததால் மெஸ்ஸியின் திறமையை நன்கு அறிந்த பார்சிலோனா கால்பந்தாட்ட அணி மெஸ்ஸியை தங்கள் அணிக்கு வாங்கிவிட்டு அவருடைய சிகிச்சைகளையும் முற்று முழுதாக பொறுப்பேற்றது.

தன்னுடைய சிகிச்சைகளுக்காகவும் கால்பந்து கனவுகளுக்காகவும் ஸ்பெயினிற்கு பறந்தார் மெஸ்ஸி. இவருடைய football club விளையாட்டுப் பயணம் 1995 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. 2001 முதல் 2003 வரை பார்சிலோனாவின் இளையோர் அணிக்காக விளையாடினார். 

மெஸ்ஸியின் கால் அசைவுகளும், டிஃபென்டரை ஏமாற்றி பந்தை கோலில் அடிக்கும் வித்தைகளும் ரசிகர்களை கவர்ந்தன. அப்போது வரையில் உடல் குறைபாட்டால் குள்ளமாக இருந்த மெஸ்ஸி யாரோடும் சகஜமாக பழகுவதில்லை. அவரோடு விளையாடும் சக வீரர்களுமோ அவரைக் குள்ளரென்று கேளி செய்வதுண்டு.

அவ்வப்போது அதைக் கேட்பதற்கு கவலையாக இருந்தாலுமே மெஸ்ஸி சிறிதும் அசந்துகொடுக்காமல் கால்பந்தில் தனக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை நினைவில் வைத்து எப்போதும் கால்பந்தாட்டத்திலேயே கவனமாக இருப்பார்.  

இருப்பினும் ஒரு புறம் சிகிச்சைகள் மறுபுறம் கல்பந்தாட்டம் என இரண்டிற்கும் முழுமையாக மெஸியால் ஈடுகொடுக்கமுடியவில்லை.

சிகிச்சை முழுமையாக நிறைவடைந்தபின்னர் மெஸ்ஸி பழமைபோல தன்னுடைய வெறித்தனமான ஆட்டத்தை காண்பித்தார்.

2005 ஆம் ஆண்டு முதன்முறையாக செம்பியன்ஸ் லீக் சீசனில் மெஸ்ஸி அறிமுகமானார். விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த அப்போட்டியில் பார்சிலோனா அணியின் அசாத்திய கால்பந்தாட்டவீரராக திகழ்ந்த  ரொனால்டினோ பந்தை மெஸ்ஸியின் பக்கம் தட்டிவிட அதை தனக்கான வாய்ப்பென்று கருதிய மெஸ்ஸி உச்சகட்ட உதைப்போடு போல் கோலுக்குள் போக அடித்தார் ஒரு அடி டிஃபென்டருக்கே டஃப் கொடுத்துவிட்டது.

இந்த ஒரு கோல் தான் மெஸ்ஸியின் பிற்கால சாதனைகளுக்கு அடித்தளமானது. குள்ளமாக இருந்தால் கோல் அடிக்க முடியாதா என்ன? என்ற மெஸ்ஸியின் தன்னம்பிக்கை அவரின்  உடல் குறைபாடு நீங்கவே பன் மடங்காய் பெருகியது.

அசந்துகொடுத்த பந்தை அசராமல் அடிக்கும் மெஸ்ஸிக்கு ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது சர்வதேசளவில் விளையாடும்போது தாய் நாட்டிற்காக விளையாடுவதா? அல்லது தன்னை தத்தெடுத்த நாட்டிற்காக விளையாடுவதா? என்பது தான்.

இருப்பினும் தன் தாய்நாட்டிற்காகவே விளையாடவேண்டுமென்று முடிவு செய்தார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆர்ஜென்டினாவின் தலைவராக களமிறங்கினார் 10 ஆம் இலக்க ஜெர்சியில் மெஸ்ஸி.

'கால்பட்டால் கோல் கை தொட்டால் கோப்பை' என்றவாறு இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மெஸ்ஸி           ஆர்ஜென்டினாவிற்கு கோப்பையை வென்றுகொடுத்தார். 

மெஸ்ஸி ஆரம்பத்தில் பார்சிலோனாவிற்காக விளையாடியபோது அவருடைய ஜெர்சி இலக்கம் 19. பார்சிலோனாவின் 10 ஆம் இலக்க ஜெர்சியை வைத்திருப்பவர்.

அசாத்திய வீரர் என்றவொரு எண்ணம் இருந்தது. அதனை அப்போது சிறந்தவீரர் ரொனால்டினோ வைத்திருந்தார். 2008 ஆம் ஆண்டு ரொனால்டினோ ஓய்வுபெறவே மெஸ்ஸிக்கு 10 ஆம் இலக்க ஜெர்சி கிடைத்தது.

அன்றிலிருந்து தன்னுடைய இலக்கம் 10 என்றவாறு எந்த ஆட்டமாக இருந்தாலும் தன்னுடைய 10 ஆம் இலக்க ஜெர்சியிலேயே களமிறங்குவார் மெஸ்ஸி. 

மெஸ்ஸி இடது கால் ஸ்டைலில் கோல் அடிப்பவர். மிகவும் நுணுக்கமான அவரின் கால் அசைவுகளும் அவருடைய திறமையும் ஆர்ஜென்டினாவை தாண்டி பலகோடி ரசிகர்களின் மனதை வெல்லக்காரணமாயிற்று.

2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு முறை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் மெஸ்ஸி களமிறங்கிய ஆர்ஜென்டினா அணி முதல் இரண்டு தொடர்களில் காலிறுதி வரையிலும்,அடுத்த இரு தொடர்களிலும் knockout சுற்றிலும் வெளியேறியது.

எப்படியாவது கோப்பையை வெல்லவேண்டுமென்ற வெறியோடு தன்னுடைய அணியை மெஸ்ஸி வழிநடத்தினாலுமே இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியையே தழுவியது ஆர்ஜென்டினா அணி.  

மெஸ்ஸியின் வாழ்க்கையில் முக்கிய சாதனை பதியப்பட்டது 2012 ஆம் ஆண்டுதான். ஒருவர் 90 கோல்களை அடிப்பது சாத்தியம்.

ஆனால் 90 கோல்களையும் ஒரே வருடத்தில் அடிப்பது சாத்தியமா? என்று கேட்டால் அசாத்தியம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளை அசால்டாக 91 கோல்களை ஒரே ஆண்டில் அடித்து கின்னஸ் புத்தகத்தில் தன்னுடைய முத்திரையை பதிவுசெய்தார் மெஸ்ஸி. 

2014 ஜூலை 14 ஆம் திகதி உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி ஜெர்மினிக்கும், ஆர்ஜென்டினாவுக்கும் இடையில் நடைபெற்றபோது பலமான டிஃபென்டர்கள் இருஅணியிலும் இருந்ததால் 90 நிமிடங்கள் வரை இரு அணியும் கோலடிக்காத நிலையில் இறுதியாக வழங்கப்பட்ட நிமிடங்களில் ஜெர்மனி அணி கோலடித்து உலகக்கோப்பையை வென்றெடுத்தது.

ஆர்ஜென்டினாவின் உலகக்கோப்பை கனவு அந்த தருணத்தில் கலைந்துபோக தோல்வியின் கண்ணீரை வெளிப்படுத்தியவரே மைதானத்தை விட்டு வெளியேறினார் மெஸ்ஸி. மெஸ்ஸியின் சோகமான இந்த தருணங்கள் உலகெங்கிலுமுள்ள அவரது ரசிகர்களை மனமுடையச் செய்தது.

ஆர்ஜென்டினா என்றவொரு நாட்டிற்கு வேற்று நாட்டவர்கள் ஆதரவு வழங்குகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் மெஸ்ஸி என்கிற அந்த பெயர் தான். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட இறுதி தொடரில் பெனால்டி சூட் முறையில் அரிய வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டமை உலகெங்கும் கோடிக்காண ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியதோடு ஆர்ஜென்டினாவின் கோப்பை கனவும் மீண்டும் பறிபோனது.

அந்த ஆண்டு மெஸ்ஸி தவறவிட்ட அந்தவொரு பெனால்டி சூட் முறையில் கோல் அடிக்க தவறிய மெஸ்ஸி கண்ணீரோடு வெளியேறியபோதே தான் தலைமையேற்றதால் தான் ஆர்ஜென்டினா அணி கோப்பையை வெல்லவில்லை என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டு தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இதனால் 'Unlucky Captain' என்று விமர்சகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார் மெஸ்ஸி. பயந்துவிடுவதற்கு பதில் இறங்கி அடித்துவிடலாம் என்று மீண்டும் தனக்குள்ளே நம்பிக்கையை வளர்த்துவிட்டு ஒருசில நாட்களிலேயே தாம் மீண்டும் விளையாடப்போவதாக மறுஅறிவிப்பு செய்தார்.

2019 ஆம் ஆண்டு FIFA மெஸ்ஸிக்கு சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை வழங்கியது. இதனால் FIFA  இற்கு கடும் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. என்னதான் சர்வதேசளவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியுற்றாலுமே ஏனைய போட்டிகளிலும் மெஸ்ஸியின் தனித்துவமான விளையாட்டுத்திறமையையும், அவருடைய வெற்றிகளையும் யாரும் புறக்கணிக்கமுடியாது.

பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடிய காலத்திலிருந்தே அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார் மெஸ்ஸி.

600 இற்கும் அதிகமான கோல்கலை அடித்து அந்த அணிக்காக வெற்றிக் கிண்ணங்களை வென்றுகொடுத்துள்ளார். ஆர்ஜென்டினா அணிக்காக 130 இற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 68  கோல்களை அடித்துள்ளார். 2008 பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் கால்பந்தாட்ட தொடரில் சாம்பியன் பட்டத்தையும் ஆர்ஜென்டினா வென்றது. 

2017 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் தோழி ஆண்டாநில்லாவை திருமணம் செய்தார் மெஸ்ஸி. அவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பதையும் மெஸ்ஸி தன்னுடைய செயல்களால் நிருபித்துக்காட்டினார்.

Messi Foundation அமைப்பினூடாக ஏழை மக்களின் கல்விக்காகவும்,சுகாதாரத்திற்காகவும் உதவிகள் செய்து வருகிறார். அத்தோடு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளுக்கும் இதன் மூலம் நிதிஉதவிகள் வழங்கி வருகிறார். 

சென்ற ஆண்டு(2021) இல் நடைபெற்ற copa america  போட்டியில்  1993 ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட காலங்களுக்குப்பின் ஆர்ஜென்டினா அணி கோப்பையை வென்றெடுத்தது.

ஆர்ஜென்டினா அணிக்காக நான்கு கோல்களை அடித்து அணியை வெற்றிபெறச்செய்த மெஸ்ஸியை ரசிகர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் கொண்டாடினர்.

எந்த மெஸ்ஸி 2016 copa america போட்டியில் பெனால்டி சூட்டில் கோல் அடிக்க தவறி கண்கள் கலங்கியவாறு தலைகுணிந்து மைதானத்தை விட்டு வெளியேறினாரோ அதே மெஸ்ஸிதான் ஆனந்தகண்ணீரால் copa america வெற்றிக்கிண்ணத்தை கட்டித் தழுவிக்கொண்டார். 

மெஸ்ஸியை பலர் The Goat என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம் தான். தன்னால் முடியவில்லை என்றாலுமே எப்படியாவது கோலை அடிக்க முயற்சித்துவிடுவார் மெஸ்ஸி.

வலிகளும்,அவமானங்களும் சந்தித்தாலும் கூட கோலை அடிக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னை செதுக்கி செதுக்கி வைத்திருக்கிறார் மெஸ்ஸி. கால்பந்தாட்டம் இருக்கும் வரை கால்பந்தாட்டத்தின் கடவுள் என்று புகழப்படும் லயோனல் மெஸ்ஸியின்  பெயரும்  சாதனைகளும்  என்றும்  நிலைத்திருக்கும்....!

ஸ்வஸ்திகா ராஜ்பிரகாஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right