இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ருத்ரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான கதிரேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ' ருத்ரன் '. இதில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் நடிகர்கள் சரத்குமார், காளி வெங்கட், பூர்ணா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.பி. திருமாறன் கதை, திரைக்கதை எழுத, ஆர்.டி.‌ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ராகவா லோரன்ஸின் எக்சன் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகில் ஹாரர் திரில்லர் ஸ்பெஷலிஸ்ட் எனும் அடையாளத்துடன் வெற்றி பெற்ற நாயகனாக வலம் வரும் நடிகர் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருப்பதால் 'ருத்ரன்' படத்திற்கு திரையுலக வணிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.