(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பாணந்துறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடற்படையினரால் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிப்படகொன்று கடற்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் போதே குறித்த படகிலிருந்த ஆட்கடத்தல்காரர்கள் ஐவர் , 25 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் உள்ளடங்களாக 35 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது , கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த மீன் பிடி படகின் இயந்திரத்தில் கோளாரு காணப்பட்டுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அந்த மீன்பிடி படகு நீண்ட தூர கடற்பயணத்திற்கு பொறுத்தமானதல்ல என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட 6 - 56 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.