பத்திரிகையாளர்  S.M. கார்மேகம் “வாழ்வும் பணியும்” என்ற நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழா லண்டனில்  25 ஆம் திகதி சனிக்கிழமை மு. நித்தியானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

284 பக்கங்களில் மலையக வராலாற்று ஆய்வாளர் எச். எச். விக்கிரமசிங்க தொகுத்து பதிப்பித்திருக்கும் இந்நூலிற்கு கலைமகள் ஆசிரியர் கிழாம்பூர் சங்கரசுப்பிரமணியம் அணிந்துரையும், முன்னாள் தினக்குரல் வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம் முன்னுரையும் எழுதியுள்ளனர்.

1960 முதல் கார்மேகத்துடன் நெருங்கி பழகிய 45 பேர்களின் காத்திரமான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. “நினைவில் வாழும் என் இனிய தந்தை” என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது புதல்வி கனகா கணேஷ், அவரது துணைவியார் ராஜாம்பாள் கார்மேகம் நன்றியுரை எழுதியுள்ளார்கள்.

வீரகேசரியில் அவருடன் பணியாற்றிய அன்னலட்சுமி ராஜதுரை தற்போது லண்டனில் வாழும் சந்திரசேகரன், வி. தனபாலசிங்கம், வி. தம்பையா, கே. வி. எஸ். மோகன். கே. நித்தியானந்தன், மு. சிவலிங்கம், கந்தையா சற்குணம், எ. கே. விஜய பாலன், எஸ். ஜெயபாலன்,  கே. கோவிந்த ராஜ்.  எச். எச். விக்கிரமசிங்க, எ. கே. எம். பிள்ளை, சிவாசிவப்பிரகாசம் (கனடா), லெ. முருகபூபதி, கனடா மூர்த்தி, சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோரது கட்டுரைகளுடன் மு. நித்தியானந்தன், தெளிவத்தை ஜோசப், எம். வாமதேவன், எ. கே. சுப்பையா, எஸ். திருச்செல்வம் (கனடா), மல்லிகை சி. குமார், பேராசிரியர் சோ. சந்திரசேகரன், பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன், மன. மக்கின், அருள் சத்தியநாதன், எம். என். அமின், பி. எம். லிங்கம், முன்னால் செய்தி ஆசிரியர் ராமு நாகலிங்கம் உட்பட மாத்தளையைச் சேர்ந்த மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை கார்த்திகேசு, எஸ். கிருஷ்ணன், பெ. வடிவேலன், அல்-அஸ்மத், பத்திரிகையாளர் கே. வேலாயுதம் உட்பட பலரது காத்திரமான ஆக்கங்கள் இந்த இரண்டாவது பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலின்; முதலாவது வெளியீட்டு விழா கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் முன்னால் அமைச்சரும், மலையக மக்கள் முன்னியின் தலைவருமான வே. இராதகிருஷ்ணன் அவர்களாலும், டில்லியுள்ள பிரவாசி பாரதிய யுககேந்திர நிலையத்தில் கோபியோ அமைப்பின் சர்வதேச மாநாட்டில் மலேசியா தலைவர் செல்வராஜ் அவரது தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த வெளியிட்டு நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் வாழும் கார்மேகத்தின் புதல்வி கனகா கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

கொட்டகலை கல்மதுரைத் தோட்டத்தில் பிறந்து கொழும்பு, சென்னை, புதுடில்லி போன்ற இடங்களில் மிகவும் புகழ்பெற்ற வீரகேசரி, தினமணி பத்திரிகை ஆசிரியர் பீடங்களில் அமர்ந்து பணியாற்றிய கல்மதுரை கார்மேகம் பற்றிய இந்த நூல் கம்போடியாவில் வெளியிடப்பட்டதில் ஒரு தனிச்சிறப்புண்டு. அதேபோல் இவ்வாறு நோக்கினால், அமரரின் புகழ் கல்மதுரையிலிருந்து கம்போடியா வரை சென்று தற்போது லண்டன் மாநகர் வரை பயணித்திருப்பது சிறப்பம்சமாகும்.