(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று தசாப்தங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய இலங்கை, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 5 ஆவதும் கடைசியுமான போட்டியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடர் வெற்றியின் போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் முதல் தடவையாக 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இலங்கை மற்றொரு வரலாற்றை பதிவு செய்தது.

இந்தத் தொடரை இலங்கை ஏற்கனவே 3 -1 என்ற ஆடக்கணக்கில்  கைப்பற்றியுள்ளதால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் முக்கியமானதாக அமையப் போவதில்லை. என்றாலும் இரண்டு அணிகளும் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தத் தொடரில் வெற்றிபெறாத போதிலும் அவுஸ்திரேலிய அணியினர் இலங்கை மக்களின் மனங்களை கொள்ளை கொண்டதை  மறக்க முடியாது.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணியினர் இங்கு வருகை தந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தமை வரவெற்கத்தக்க விடயமாகும். அத்தடன் ஐக்கிய நாடுகள் உணவுத் திட்டம் உட்பட வேறு வகைளில் இலங்கைக்கு உதவுவதாக அவுஸ்திரேலிய வீரர்கள் உறுதி வழங்கியதை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இந் நிலையில், அவுஸ்திரேலியர்களின் இந்த மனிதாபிமான நல்லெண்ணத்தை கௌரவிக்கும் வகையில் இரசிகர்கள் கூடுமானமட்டும் மஞ்சள் நிற உடை அணிந்து கடைசிப் போட்டியைக் கண்டுகளிக்க வருமாறு சமூக ஊடக வலைத்தலங்கள் சில கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் நான்காவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய கடைசிப் போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சகல வீரர்களும் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமை அணி முகாமைத்துவத்துக்கும் புதிய பயிற்றுநர் சில்வர்வூடுக்கும் திருப்தியைக் கொடுத்துள்ளது.

குறிப்பாக பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க ஆகியோர் துடுப்பாடத்திலும் வனிந்து ஹசரங்க டி சில்வா, இளம் வீரர் துனித் வெல்லாலகே ஆகியோர் சகலதுறைகளிலும் பிரகாசித்தமை இலங்கை அணிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில் இன்னும் சில தினங்களில் காலியில் ஆரம்பமாவுள்ள டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நோக்கில் இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து ஆறுதல் வெற்றியை ஈட்டுவதற்கு அவுஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.

ட்ரவிஸ் ஹெட் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, சர்வதேச ஒருநாள் தொ டருக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களைப் போன்று டெஸ்ட் தொடருக்கும் ஆடுகளம் தயாரிக்கப்பட்டால் அது இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என ஊடக சந்திப்பின்போது அவுஸ்திரேலிய ஆரம்ப வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்தார்.

மேலும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் அதிகளவில் சுழல்பந்துவீச்சாளர்களை இலங்கை அணி பயன்படுத்தியதன் மூலம் தங்களுக்கு சிறந்த பயிற்சி கிடைத்ததாகவும் அதன் மூலம் டெஸ்ட் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணிகள் (5ஆவது சர்வதேச ஒருநாள்)

இலங்கை: நிரோஷன் திக்வெல்ல அல்லது தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, வனிந்து ஹசரங்க டி சில்வா, ஜெவ்ரி வெண்டர்சே, மஹீஷ் தீக்ஷன அல்லது துஷ்மன்த சமீர.

அவுஸ்திரேலயா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், மார்னுஸ் லபுஸ்சான், அலெக்ஸ் கேரி, ட்ரவிஸ் ஹெட் அல்லது ஸ்டீவன் ஸ்மித், கெமரன் க்றீன், பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மெத்யூ குனேமான்.