சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பி.எம்.டபிள்யூ, மெர்சிடெஸ் மற்றும் ஆடி கார்கள் உள்ளடங்குவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரி பாகங்கள் என்ற போர்வையில் இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட  50 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதிக் கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில், தடைசெய்யப்பட்ட பொருட்களில் 40,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2500 போத்தல் விஸ்கி, இயந்திர எண்ணெய் (Engine oil), அழகு சாதனப் பொருட்கள், மஞ்சள் மற்றும் லைட்டர்கள் ஆகியவை அடங்கும்.

வத்தளை சரக்கு அகற்றும் நிலையத்தில் (cargo clearing centre) இரண்டு கொள்கலன்களில் இருந்து இந்த பொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.