(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பொருளாதாரத் தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு பங்காளித்துவத்தினை ஊக்குவிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்மட்ட குழுவினருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு மேலும் உதவக் கூடிய முறைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தது.

இக்குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்த சந்திப்பில், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார மீட்சியை அடைவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கலந்துரையாடினர்.

இந்தச் சூழலில், உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான பொருளாதாரத் தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - இலங்கை முதலீட்டு பங்காளித்துவத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், மனிதாபிமான உதவி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, வணிக ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு மற்றும் மக்களின் நிலையான ஆதரவை இலங்கை தரப்பு பாராட்டியது.

இலங்கைக்கான மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக இந்தியா காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வாஷிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களின் போது இந்தியா வழங்கிய ஆதரவை இலங்கை வரவேற்றது.

அத்தோடு கொவிட் தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரச் செயற்பாடுகளை இயல்பாக்குவதைக் கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க மற்ற நாடுகளை ஊக்குவிப்பதில் இந்தியத் தலைமையின் முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.