(நா.தனுஜா)

இலங்கையின் வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சியினால் வர்த்தக, இருதரப்பு, பல்தரப்பு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுக்கடன்களையும் மீளச்செலுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன, இலங்கை நம்பகத்தன்மை வாய்ந்த நுண்பாகப்பொருளாதார செயற்திட்டமொன்றைத் தன்வசம் வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

 மிகமோசமடைந்துவரும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையின் வெளிநாட்டுக்கையிருப்பு 4 பில்லியன் டொலர்கள் என்ற மிகவும் பாதகமான மட்டத்தில் காணப்படும் நிலையில், வர்த்தக, இருதரப்பு, பல்தரப்பு, தனியார் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுக்கடன்களும் மீளச்செலுத்தமுடியாத நிலையிலுள்ளன.

அதேவேளை பிணைமுறிதாரரான ஹமில்டன் ரிசேர்வ் வங்கி அடுத்த மாதம் முடிவுறும் 257 மில்லியன் டொலர் பெறுமதியான பிணைமுறிக்கான கட்டணத்தை முழுமையாகச் செலுத்துமாறுகோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது.  

மறுபுறம் இலங்கைக்கான ஏனைய கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகக் குழுவொன்றை உருவாக்கியிருக்கின்றார்கள்.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப இணக்கப்பாட்டின் அடிப்படையில் தாம் செயற்படவிருப்பதாக அறிவித்திருக்கும் இருதரப்பு, பல்தரப்பு, தனியார் கடன்வழங்குனர்கள் இன்னமும் வேறு எதனையும் கூறவில்லை.

 இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை நம்பகத்தன்மை வாய்ந்த நுண்பாகப்பொருளாதார செயற்திட்டமொன்றைத் தன்வசம் வைத்திருப்பது அவசியம் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கடன்வழங்குனர்கள் நீண்டகால அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு முன்வராதபோது, மக்கள் வரையறுக்கப்பட்ட வளங்களை அதிகளவில் செலவிடுவார்கள்.

எனவே சுகாதாரம், கல்வி, சக்திவலு, வணிகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசநிர்வாகக்கட்டமைப்பும் சீர்குலைந்திருக்கும் நிலையில், உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காண்பிக்கும் தாமதம் உகந்ததல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.