(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் சகல தீர்மானங்களும் தோல்வியடைந்துள்ளன. உதவி செய்யும் உண்மையான நண்பனை அரசாங்கம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் விளங்கிக்கொள்ளவில்லை என கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியினை தோற்றுவித்துள்ளன. அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

சமூக மட்டத்திலான பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை.

ரஸ்யாவிடமிருந்து எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் ஆகியவற்றை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ள நிலையில் அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படும் என குறிப்பிடப்பட்டது வெறும் மாயையாக உள்ளது. பிரச்சினைகள் தொடர்பான அறிவிப்பாளராகவே பிரதமர் உள்ளார்.

அரசாங்கத்தின் சகல தீர்மானங்களும் தோல்வியடைந்துள்ளன. பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவில்லை. 

எரிபொருள் வரிசையில் காத்திருந்து மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் முறையான கொள்கை திட்டத்தை செயற்படுத்தவில்லை.

ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கான ரஸ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போது 'உதவி செய்யும் உண்மையான நண்பனை இலங்கை அடையாளப்படுத்திக்கொண்டு, அவர்களிடமிருந்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்' என தூதுவர் குறிப்பிட்டார். இதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இதுவரை விளங்கிக்கொள்ளவில்லை என்றார்.