(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு மேலதிகக் கடன்களை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியக் குழு வருகை தந்துள்ளமையின் பின்னணியில், கச்சதீவினை தாரை வார்க்கும் சதித்திட்டம் காணப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் வரிசைகளை இல்லாமலாக்குவார் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் பெருமை கதைகளைப் பேசினர்.

ஆனால் அவரால் ஒரு டொலரையேனும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் நாட்டின் பிரச்சினைகளையும், நாட்டுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு குழுக்கள் பற்றியும் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்.

தற்போது இலங்கைக்கு மேலதிக கடன் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய குழுவொன்று வரவுள்ளதாகக் கூறுகின்றார்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது கச்சதீவினை தாரை வார்ப்பதற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிய விக்கிரமசிங்க இன்று விற்கும் சிங்கமாகியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வினை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துச் சென்றமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலிருந்து ஓடவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்காமல் வெறுமனே பயனற்ற விவாதங்கள் முன்னெடுக்கப்படும் சபையில் இருப்பது பிரயோசனமற்றது என்று கருதியே நாம் வெளிநடப்பு செய்தோம்.

சர்வதேச நாணய நிதியக்குழு நாட்டு விஜயம் செய்துள்ளமையினால் , அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதினால் வரிசைகளை இல்லாமல் செய்து விட முடியாது.

எனவே அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மக்களுக்கு விரைவில் தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.