(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் எதிர்வரும் மாதம் இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஏன் இப்பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ரஷ்யாவை இணைத்துக்கொள்ளவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காக அரசாங்கம் ரஸ்யாவை புறக்கணிக்கிறது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதன் பின்னணியில் ரஸ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தோம்.

எரிபொருள் கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினை மற்றும் தீர்வு குறித்து கலந்துரையாட ஜனாதிபதியிடம் அனுமதி கோரியிருந்த போதும் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜனாதிபதிக்கு நாங்கள் பெறுமதியற்றவர்களா அல்லது நாங்கள் குறிப்பிட்ட விடயம் பெறுமதியற்றதா என்பது பிரச்சினைக்குரியதாகவுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் ரஸ்யாவிடமிருந்து அரசாங்கம் எரிபொருள்,எரிவாயு மற்றும் உரம் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கு இதுவரை அவதானம் செலுத்தவில்லை.

பொருளாதார மீட்சிக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என ஜனாதிபதி இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏன் இதுவரை ரஸ்ய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

சர்வதேச அரங்கில் இலங்கை தீர்மானமிக்க தருணங்களை எதிர்க்கொண்ட போது ரஸ்யா நிபந்தனையற்ற வகையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதை அரச தலைவர்கள் மறக்க கூடாது.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து அரசாங்கம் எதிர்வரும் மாதம் ஜப்பான்,சீனா மற்றுத் இந்தியா ஆகிய நாடுகளை ஒருமுகப்படுத்தி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் ஏன் இப்பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ரஸ்யாவை இணைத்துக்கொள்ளவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இறுதி தீர்வு என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதால் நடுத்தர மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. இந்தியா இன்னும் எத்தனை காலத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதை குறிப்பிட முடியாது.

நாட்டு மக்க்ள எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.