(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை முறியடிப்பதற்கு நெருங்கிய நண்பன் என்ற ரீதியில் இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் வினய் க்வாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாடு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய இந்திய அரசாங்கம் கடன் திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.

அதற்கமைய இதுவரையில் சுமார் 3.5 பில்லியன் டொலர் உதவிகளை இந்தியா , இலங்கைக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்திய கடன் திட்டம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து எரிபொருள் இறக்குமதியில் மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அந்நாட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுகள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து , இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்து இலங்கை அரசாங்கமும் இக்கோரிக்கையை முன்வைத்தது. அதன் அடிப்படையிலேயே இந்திய உயர்மட்ட தூதுக்குழு இன்று 3 மணித்தியால குறுகிய விஜயத்தை மேற்கொண்டு தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.

இலங்கைக்கு மேலும் வழங்கக் கூடிய நிதி உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று வியாழக்கிழமை காலை இந்திய வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட நாட்டை வந்தடைந்தது.

இக்குழு கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தீர்க்கமான கலந்துரையாடல்களையும் முன்னெடுத்தது. இதன் போதே இந்திய வெளியுறவுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் இதுவரையில் இலங்கைக்கு எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மதிப்பாய்வு செய்த இந்திய தூதுக்குழு , இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கமும் , அரசியல் அதிகாரிகளும் உறுதியுடனிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மிகவும் நெருக்கடியான இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதில் இந்திய அரசாங்கம் தனித்துவமான பாகத்தை வகிக்கிறது.

அதற்காக நாட்டு மக்களதும் அரசாங்கத்தினதும் நன்றியை இந்திய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் , வழமை நிலைமைக்கு மீள் கட்டியெழுப்புவதற்கும் இந்திய நிவாரண வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் இதன் போது இடம்பெற்றது.

இக்கட்டான காலகட்டத்திற்குப் பிறகு நாடு விரைவில் மீண்டு வரும் என்றும் தூதுக்குழுவினர் இதன் போது நம்பிக்கை தெரிவித்தனர்.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் இந்திய பொருளாதார தொடர்புச் செயலாளர் அஜய் செத், பிரதான பொருளாதார ஆலோசகர் கலாநிதி வீ ஆனந்த நாகேஷ்வரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜாகொப், இந்திய கடற்பிராந்திய ஒருங்கிணைந்த செயலாளர் கார்த்திக் பான்டே மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.