(நெவில் அன்தனி)

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒலிம்பிக் தினம் ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தலைமையில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

பல வருடங்களாக தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோரின் வழிகாட்டலில் புதுப்புது விடயங்களுடன் நடத்தப்பட்டு வந்த தேசிய ஒலிம்பிக் தினம் இந்த வருடம் ஒலிம்பிக் தலைமையகத்தை சூழவுள்ள பகுதியிலும் ஒலிம்பிக் இல்லத்திலும் எளிமையாக நடத்தப்படவுள்ளது.

இவ் வருட ஒலிம்பிக் தினம் அமைதியை நோக்கி நகர்தல் என்ற கருப்பொருளில் நடத்தப்படுகின்றது.

இதேவேளை, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு இன்று காலை ஒலிம்பிக் பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்ட புதிர் போட்டி ஒன்றை இணையவழியில் மெய்நிகர் நிகழ்ச்சியாக தேசிய ஒலிம்பிக் குழு நடத்தியது.

கடந்த காலங்களில் ஒலிம்பிக் தினம் பிற மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த வருடம் ஒலிம்பிக் தினத்தை கொழும்பில் நடத்த இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது.

 சுதந்திர சதுக்கத்தில் ஒலிம்பிக் தீபமேற்றலுடன் ஒலிம்பிக் இல்லம் வரை நடைபெறவுள்ள பவணியுடன் ஒலிம்பிக் தின கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது.  

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் இல்லத்தில் அமைந்துள்ள ஹேமசிறி கேட்போர்கூடத்தில் விசேட வைபவங்கள் நடைபெறவுள்ளன.

தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளதுடன் ஒலிம்பிக் தினத்தின் மகத்துவதையும் எடுத்துரைக்கவுள்ளார்.

இந் நிகழ்வில் சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச்சின் உரை ஒளிபரப்பப்படவுள்ளதுடன் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட்டு பிரதான உரையை நிகழ்த்துவார்.

அடையாள மரக் கன்றுகள் வழங்கல் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கல் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒலிம்பிக் தின வரலாற்றைப் பற்றிய வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும்.

தொடர்ந்து  ஒலிம்பிக்  தேசிய குழு செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவின் நன்றியுரையுடன் ஒலிம்பிக் தின உத்தியோகபூர்வ கொண்டாட்டம் நிறைவு பெறும்.

மாலையில் தேசிய ஒலிம்பிக் குழு வளாகத்தில் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும்.