சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் போத்தல்வீசி எறிந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓபிஎஸ் முதுகில் சிலர் சரமாரியாக குத்தியுள்ளனர்.

சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (23) நடைபெற்று வருகிறது. கடந்த 9 நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரத்தின் பரபரப்பு உச்சத்தில் இருந்த நிலையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் அவர்களது ஆதரவாளர்களும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்றது. 

நேற்று மாலை அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றனர். இதனால் பொதுக்குழு நடைபெற்றால் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று காலை முதலே பொதுக்குழு நடைபெறும் தனியார் மண்டபம் முன் அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூஜைகள் முடித்து வெவ்வேறு வழிகளில் பொதுக்குழுவுக்கு புறப்பட்டனர்.

வானகரம் வரும் வழியில் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் மறுபக்கம் ஓபிஎஸ்-க்கு பெரிய அளவில் ஆதரவோஇஆரவாரங்களோ இல்லை. இதனால் இபிஎஸ்-க்கு முன்பாகவே பொதுக்குழு கூட்டம் வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத்தொடர்ந்து உள்ளே சென்ற ஓ.பன்னீர் செல்வத்தற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்துநின்று கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல் பொதுக்குழு அரங்கிற்குள் ஓபிஎஸ்-க்கு எதிராக ஒற்றைத் தலைமை வேண்டும் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்-க்கு தலைமைக் கழகம் சார்பாக எந்தவொரு வரவேற்பும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தொண்டர்களை அமைதிப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் வளர்மதி ஆகியோர் பேசினர்.

இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம் வெல்லமணி நடராசன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேடையில் அமராமல் அவர்கள் கீழே இறங்கினர்.அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த 23 தீர்மானங்களையும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். ஒற்றை தலைமையை மாவட்டச் செயலாளர்கள் விரும்புவதாகவும் சண்முகம் பேசினார். 

இதனால் கோபமடைந்தார் ஓபிஎஸ். விதிமுறைகளுக்கு புறம்பாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக இருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து வெளியேறினார். அவருடன் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்இ ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் வெல்லமண்டி நடராசன் ஆகியோர் வெளியேறினர்.

அப்போது ஓபிஎஸ் பின் சென்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அவரோடு வைத்திலிங்கம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திலிருந்து சிலர் ஓபிஎஸ் முதுகில் குத்தியுள்ளனர். இத்தனை களேபரத்திற்கு பிறகு ஓபிஎஸ் வெளியேறினார்.