(நெவில் அன்தனி)

இன்னும் சில வருடங்களில் தொழில்முறை கழகமாக முன்னேறி சுப்பர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடிவரும் மாவனெல்லை செரெண்டிப் கழகம், அதற்கான அத்திவாரத்தை சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இட்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றும்  செரெண்டிப் கழகம்   இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அணிகள் நிலையில் 9 புள்ளிகளுடன் நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் முதுலிடத்தை வகிக்கிறது,

குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற தனது முதலாவது போட்டியில் யாழ்ப்பாணம், நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்தை எதிர்த்தாடிய செரெண்டிப் 4 - 0 என்ற கோல்கள் கணக்கில் பெரிய வெற்றியுடன் தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்தது.

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற நியூ ஸ்டார் கழகத்துடனான தனது 2ஆவது போட்டியில் 3 நிமிட இடைவெளியில் பெனல்டி உட்பட 2 கோல்களைப் போட்ட செரெண்டிப் கழகம் அதன் பின்னர் கடும் சவாலை எதிர்கொண்டு 3 - 2 என்ற கொல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

கடைசியாக கண்டி போகம்பறை மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மொரகஸ்முல்லை கழகத்துடனான 3ஆவது போட்டியில் 3 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் செரெண்டிப் இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வாரம் சுகததாச அரங்கில் நடைபெறவுள்ள போட்டியில் மிகவும் பழைமைவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை செரெண்டிப் கழகம் எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியிலும் வெற்றிபெறுவதற்கு செரெண்டிப் முயற்சிக்கவுள்ளது.

சம்பின்ஸ் லீக்கில் பங்குபற்றும் 14 அணிகளில் சற்று பலம்வாய்ந்ததாக காணப்படும் செரெண்டிப் கழகத்தில் 3 ஆபிரிக்க வீரர்கள் இடம்பெறுவது அவ்வணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைகின்றது. அதேவேளை திறமையான உள்ளூர் வீரர்களும் தாராளமாக இடம்பெறுகின்றனர்.

நடந்து முடிந்த 3 போட்டிகளில் ஒரு ஹெட்-ட்ரிக் உட்பட 6 கோல்களை மொத்தமாக போட்டுள்ள இவான்ஸ் அவன்டே, இந்த சுற்றுப் போட்டியில் அதிக கோல்களைப் போட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தல் இருக்கிறார்.

இவ்வணியில் இடம்பெறும் இவான்ஸ், ஓஃபோரி ஜோர்ஜ், குவாட்றி பிறின்ஸ் ஆகிய மூவரும் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

முன்னாள் தேசிய வீரர் எம்.என்.எம். இஸ்ஸதீன், கோல்காப்பாளர் மொஹமத் லுத்துபி ஆகிய இருவரும் சிரேஷ்ட வீரர்களாக அணியில் இடம்பெறுகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் இராணுவ அணி வீரர்களாவர்.

என்றும் இளமை துடிப்புடன் விளையாடும் இஸ்ஸதீன் கடந்த இரண்டு போட்டிகளில் 3 கோல்களைப் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இராணுவம் சார்பாக சம்பியன்ஸ் லீக்கில் விளையாடியபோது பல தடவைகள் அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான தங்கப் பந்தை இஸ்ஸதீன் வென்றுள்ளார்.

இவர்களை விட அணித் தலைவர் ரியாஸ் மொஹமத் அனுபவம் வாய்ந்த வீரராவார். றினோன், சொலிட், டிபெண்டர்ஸ் ஆகிய அணிகளில் விளைடியிருந்த ரியாஸ் அணியை செவ்வனே வழிநடத்தி வருகிறார்.

வட மாகாண அணியில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகுமார் விக்னேஷ், கிழக்கு மாகாண அணியில் விளையாடி திறமையை வெளிப்படுத்திய மொஹமத் ரினாஸ், மொஹமத் பயாஸ் ஆகியோரும் செரெண்டிப் அணியில் இடம்பெறுகின்றனர்.

அத்துடன் 20 வயதுக்குட்பட்ட தேசிய குழாத்தில் இடம்பெற்ற மொஹமத் ஷக்கீல், மித்தும் தேஷப்ரிய ஆகியோரும் செரெண்டிப் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

1989ஆம் ஆண்டு எம்.எஸ்.எம். காமில் ஸ்தாபித்த செரெண்டிப் கழகத்தின் தற்போதைய தலைவராக எம். ஐ. எம். பௌமி செயற்படுகிறார்.

அணியின் பயிற்றுநராக முன்னாள் இராணுவ அணி பயிற்றுநர் எம்.ஆர்.எம். முர்ஷித் செயற்படுகிறார். இவரது பயிற்றுவிப்பில் இராணுவ அணி, 2018இல் சம்பியன்ஸ் லீக், எவ்.ஏ. கிண்ணம் ஆகிய போட்டிகளில் சம்பியனாகி இருந்தது.

இத்தகைய அனுபவம் வாய்ந்த முர்ஷித், செரெண்டிப் கழகத்தையும் சம்பியன் அணியாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

2018இல் நடைபெற்ற முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம் சம்பியன்ஸ் லீக்கிற்கு செரெண்டிப் கழகம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

2021இல் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணப் போட்டியிலும் விளையாடிய செரெண்டிப் கழகம் அப் போட்டியில் மாறுபாடான பெறுபேறுகளைப் பெற்றிருந்தது,

இலங்கையில் சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் கழகங்களின் எண்ணிக்கையை அதிகரித்து போட்டித்தன்மையை ஏற்படுத்த சம்மேளனம் முயற்சித்து வருகின்ற நிலையில் செரெண்டிப் கழகம் தொழில்முறை அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சித்து வருகிறது. இக் கழகம்  தொழில்முறை அந்தஸ்தைப் பெற்று சுப்பர் லீக்கில் பங்குபற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.

செரெண்டிப் குழாம்

ரியாஸ் மொஹமத் (தலைவர்), மொஹமத் லுத்துபி, நிஷான் ஜீவன்த, மொஹமத் ரினாஸ், மொஹமத் இஸ்ஸதீன், ரியாஸ் அஹமத், மொஹமத் பயாஸ், மொஹமத் ஷக்கீல், குவாட்ரி பிறின்ஸ், ஒஃபோரி ஜோர்ஸ், அசன்டே இவான்ஸ், நஸ்ருல்லா அமீர் அலி, ஹஷான் நவோத்ய, மொஹமத் பஸீல், மொஹமத் இஷ்ரான், அன்டன் மதுஷன்க, மொஹமத் சப்வான், பாறூக் பௌஸான், மஸாஹிர் ஆய்மான், விஜயகுமார் விக்னேஷ், மித்தும் தேஷப்ரிய, மொஹமத் ஆசிர், அஹமத் முனாவ்வர், மொஹமத் ஸய்த், மொஹமத் ஸமீல்.