(நெவில் அன்தனி)

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்றால் இலங்கை அணியால் போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.

இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கு கிடையில் இருவகை மகளிர் கிரிக்கெட் போட்டி  | Virakesari.lk

இந்திய அணிக்கு எதிராக நாளை வியாழக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்கு முன்னர் கருத்து தெரிவிக்கையிலேயே சமரி அத்தபத்து இதனைக் குறிப்பிட்டார்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலாவாய விளையாட்டு விழா அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவ்விழாவில் அறிமுகமாகும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையும் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது.

அப் போட்டிக்கு இலங்கை அணியை தயார்படுத்துவதற்கு இந்தியாவுடனான மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடர் சிறந்த களமாக அமையும் என அவர் கூறினார்;.

'நாங்கள் பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஜூலை மாதம் விளையாடவுள்ளோம். அதனை முன்னிட்டு ஜூலை 25ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளோம்.

அதற்கு முன்பதாக இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இருபது 20 கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் இருபது கிரிக்கெட் இருதரப்பு தொடர்களில் விளையாடாததால் இந்தத் தொடர் எங்களுக்கு ஒரு பரீட்சைக் களமாக அமையும்' என்றார்.

'எமது அணியில் பல சிறந்த வீராங்கனைகளும் இளம் வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய சர்வதேச அனுபவம் இல்லை. எனவே அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த  இந்தத் தொடரைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

பாகிஸ்தானுடான தொடரில் தோல்வி அடைந்து நாடு திரும்பிய பின்னர் தம்புளையில் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமரி கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பாகிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 3 - 0 எனவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 எனவும் இலங்கை தோல்வி அடைந்தது.

அது தொடர்பாக பேசிய அவர், 'கராச்சியில் விளையாடிய ஆடுகளும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. எமது வீராங்கனைகள் பிரதான ஆடுகளங்களில் திறமையை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

ஆனால், இந்தத் தொடருக்கு ஒதுக்கப்பட்ட மைதானத்தின் ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அவர்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக துடுப்பெடுத்தாடுவதில் நாங்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

'எவ்வாறாயினும் இந்தியாவுக்கு எதிராக எமது சொந்த மைதானத்தில் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாங்கள் அறிவோம். தம்புளை ஆடுகளம் தொடர்பாக எங்களுக்கு உள்ள அறிவு, அனுபவம் என்பன எமக்கு சாதமாக இருக்கும் என நம்புகின்றேன். எமக்கு அனுகூலமான சூழலைப் பயன்படுத்தி இந்தியாவை எதிர்கொள்வோம்' என சமரி அத்துபத்து மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 250 முதல் 280 ஓட்டங்களையும் சர்வதேச இருபது 20 போட்டிகளில் 150 முதல் 160 ஓட்டங்களையும் எம்மால் பெற முடிந்தால் எதிரணிகளுக்கு எமது அணி சவால் மிக்கதாக விளங்கும் என்றார் சமரி அத்தபத்து.