(நெவில் அன்தனி)

 

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கு வருகைதரவுள்ளது.

2015க்குப் பின்னர் டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கைக்கு    வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஜூலை 16ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் ஜூலை 24ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமையவுள்ளது.

இரண்டு அணிகளும் கடைசியாக 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியிருந்தன.

லாகூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பயணித்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு 2019ஆம் ஆண்டில் இலங்கை அணி சென்று 2 போட்டிகளில் விளையாடியிருந்தது.

இலங்கைக்கு எட்டாவது நாடாக 1981இல் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் பாகிஸ்தானுடன் 1982இலிருந்து 2019வரை 55 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடியுள்ளன. அவற்றில் 20 போட்டிகளில் பாகிஸ்தானும் 16 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன.

மற்றைய 19 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.