குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். குழந்தைகள் நமது செல்வங்களாக போற்றப்பட வேண்டியவர்கள்.
குழந்தைகள் மனதளவில் எந்தவித கள்ளம் கபடமும் இல்லாதவர்கள். தாம் செய்வது சரியா, தவறா என்பதை கூட பிரித்தறிய தெரியாத பிஞ்சு உள்ளங்கள்.
குழந்தைச் செல்வத்துக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், அதன் வரவுக்காக ஏங்கித் தவிப்பவர்களும் அநேகம் பேர்.
எனினும், சில தாய்மார்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, ‘இவளும் ஒரு தாயா?’ என்ற கேள்வி மனதுக்குள் எழுகின்றது. கேள்வி மட்டுமில்லாமல், துயரமும், கூடவே கோபமும் பொங்கி எழுகின்றது.
பூவைப் போன்ற குழந்தைகளுக்கு தற்போது நேரும் கொடுமைகளை நினைக்கும்போதே மெய் சிலிர்க்கிறது.
‘பெற்றெடுத்த குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்’, ‘சிசுவை வீதியில் அநாதையாக விட்டுச் சென்ற தாய்’, ‘தவறான உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்’ போன்றவாறு மனதை உலுக்கும் செய்திகளை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம்.
உலகம் முழுவதுமே இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது இப்போது சாதாரண விடயங்களாகிவிட்டது.
பிடிக்காத கணவன் மீதுள்ள கோபம், வெறுப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த பிஞ்சுக் குழந்தையின் உடலில் இரத்தம் சொட்டச் சொட்ட அடியாய் விழுந்திருக்கிறது. வலி தாங்க முடியாத அந்த குழந்தையின் கதறல் எத்தனை மனங்களை கலங்க வைத்தது. இது சமீபத்தில் நடந்த ஒரு கொடுமைச் சம்பவம்.
பிறந்து சில தினங்களே ஆன, பச்சிளம் குழந்தையை அப்படியே நடு வீதியில் விட்டுச் சென்றிருக்கிறாள், ஒரு தாய்.
வறுமையா அல்லது வேறெதும் காரணமா என்று யூகிக்க முடியாத நிலையில் தனது மகனை கங்கையில் தூக்கி எறிந்துவிட்டு, தானும் சாகத் துணிந்திருக்கிறாள், இன்னொரு தாய். ஆனால், நடைபாதையில் சென்றவர்களால் அந்தத் தாய் காப்பாற்றப்பட்டுவிட்டாள். ஆனால், அந்த பாலகனின் நிலை என்ன? அது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
வீட்டுப்பாடம் செய்யாத தன் பிள்ளையை மொட்டை மாடியில் உச்சி வெயிலில் கை, கால்களை கட்டிப் போட்டு தண்டனை கொடுத்திருக்கிறாள், வேறொரு தாய்.
வறுமையோ, குடும்பப் பிரச்சினையோ… காரணம் எதுவாக இருந்தாலும், பெற்ற பிள்ளையை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என்று எண்ணும் அம்மாக்களால், இவ்வாறு தன் கண் முன்னே குழந்தைகளுக்கு நேரும் அவலத்தை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது.
அந்தப் பிள்ளைகளின் நிலையை பார்க்கும்போது ‘அவன் நம் பிள்ளையைப் போல் தானே இருந்திருப்பான்’, ‘நம் மகன் வயது தானே அவனுக்கும் இருக்கும்’ என்றவாறு தன் பிள்ளைகளின் தலையை தடவிக் கொடுப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
ஒரு குழந்தையை இவ்வுலகத்துக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மரணத்தின் விளிம்புக்குச் சென்றே தாயானவள் தன் குழந்தையை பிரசவிக்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளை கண்மூடித்தனமாக அடிப்பது, தாங்க முடியாத தண்டனை கொடுப்பது, கொலை செய்வது போன்ற செயல்களை எவ்வாறு செய்ய முடிகிறது?
பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால், சில தாய்மார்களின் மனம் கல்லாக மாறுகிறதே, ஏன்?
பிள்ளைகளுக்கு பிறரால் பாதுகாப்பில்லை. அதனால், பெற்றோர் அவர்களை கவனமாக பராமரிக்கும் பொறுப்பில் உள்ளனர். ஆனால், பெற்றோரே இவ்வாறு செய்தால் பிள்ளைகள் எங்கே போவார்கள்?
பிள்ளைகளே உலகம் என வாழ்பவர்களுக்கு மத்தியில், சிலரது மூர்க்கத்தனமான செயல்கள் நம்மை மனதளவில் நொறுங்கிப் போகச் செய்துவிடுகிறது.
பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்க்க போதுமான வசதி இல்லாவிட்டால், அதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கின்றன.
பிள்ளைப் பாசத்துக்காக ஏங்குபவர்களுக்கு பிள்ளைகளை தத்து கொடுக்கலாம் அல்லது சிறுவர் இல்லங்களின் பராமரிப்பில் விட்டுவிடலாம். பிறரின் அன்பிலாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.
அதை விடுத்து அவர்களை கொடுமைப்படுத்துவது, வீதிகளில் எறிந்துவிட்டுச் செல்வது பெரும் பாவமாகும்.
மலர வேண்டிய மொட்டை மலரவிடாமல் கசக்கிப் போடுவது கொடுமையிலும் கொடுமையல்லவா!
தாய் என்பவள் கடவுளுக்கும் மேலானவள். சிலர் தன் தாய்மையை மறந்துவிட்டு, மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இனியேனும், இந்தக் கொடுமைகள் முற்றுப்பெற வேண்டும்.
பிள்ளைகளை பாதுகாப்போம்! அவர்கள் நமது நாளைய ரூபங்கள்!
- து.சிந்துஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM