பாரதி இராஜநாயகம்

பலாலியிலிருந்து தமிழகத்தின் இரண்டு பிரதான நகரங்களுக்கான விமான சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாக இருக்கலாம்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்து, பலாலி விமான நிலையத்தின் நிலை குறித்து கள ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை அறிவித்தார்.

 பலாலியிலிருந்து சென்னைக்கும், திருச்சிக்கும் தினசரி விமான சேவைகள் ஜூலை முதலாம் திகதி முதல் நடைபெறவிருக்கும் நிலையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படும் பலாலி விமான நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பதிலோ அங்கிருந்து தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பித்தால் வடபகுதியிலுள்ள தமிழர்கள் அதிகளவுக்குப் பயன்படுவார்கள் என்பதையிட்டோ இலங்கை அரசாங்கம் ஒரு போதும் அக்கறைகாட்டியது கிடையாது.

போர் முடிவுக்கு வந்தபின்னர் பயணிகளை அதிகளவுக்கு கவர்ந்திழுக்காத மத்தளையில் பல கோடி ரூபாவில் விமான நிலையம் ஒன்றை அமைத்த அரசாங்கம், பலாலியை புனரமைப்பதில் அக்கறைகாட்டவில்லை. பலாலி விமான நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு, மீளத் திறக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2014 இல் இலங்கை அரசுக்கு மட்டுமன்றி இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்தது.

இந்தியப் பிரதமர் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில் கொழும்புடன் புதுடில்லி பேச்சுகளை 2015 இல் ஆரம்பித்தது. இதனையடுத்து பலாலி விமான நிலையத்தை மேம்படுத்துவதறகான உடன்படிக்கை ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. 

தென்பகுதியிலிருந்து இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்காக கொடுத்த அழுத்தம் காரணமாக இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையாக இருந்தது. இந்தியாவுக்கும் அதற்கான தேவை இருந்ததால் அதனைச் செய்தது.

பலாலி விமானத் தளத்திலிருந்த விமானப்படை அதிகாரிகள் கூட இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு அப்போது ஒத்துழைப்பை வழங்கமறுத்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. உள்ளூர் தமிழ் மக்கள் இதனால் பயனடைவார்கள் என்பதுதான் இதற்குக்காரணம்.

பலாலி விமான நிலையத்தை மீள ஆரம்பிப்பதில் தென்பகுதியில் அப்போது உருவான எதிர்ப்புக்களை சமாளிக்க 'நல்லாட்சி' அரசின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இரண்டு விடயங்களை அப்போது தெரிவித்தார்.

ஒன்று - பலாலி சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் அவேளையில் இரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

இரண்டு - பலாலி விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமான சேவைகள் மட்டுமே நடைபெறும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையடுத்தே ரணில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் பலாலி விமான நிலையம் 'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்' என்ற பெயரில் 2019 ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

முதலாவது விமானம் அன்றைய தினம் சென்னையிலிருந்து வந்து பலாலியில் தரையிறங்கியது. சென்னை, திருச்சி என்பவற்றைத்தாண்டி ஹைதராபாத், பெங்களுரு, கொச்சின், மும்பாய் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளும் பலாலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டன. பலாலி விமான நிலையத்தின் முக்கியத்துவத்தை இது மேலும் அதிகரித்திருந்தது.

ஆனால், கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் அதனைக் காரணம் காட்டி இதனை மூடிய இலங்கை அரசாங்கம் இதனை மீளத் திறப்பதில் அக்கறை காட்டவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் காரணம்காட்டி இதனை ஒரேயடியாக மூடிவிடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விமான நிலையத்தின் மூலமாக யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதையும், தமிழகத்துடனான தொடர்புகள் வலுவடைவதையும் விரும்பாத சில அதிகாரிகளே இந்த விமான நிலையத்தை மூடிவிட வேண்டும் என்பதில் அக்கறைகாட்டியிருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இருந்தபோதிலும் இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாகவே இப்போது பலாலியை மீண்டும் திறப்பதற்கு இலங்கை இணங்கியதாகத் தெரிகின்றது.

இப்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமாகவுள்ள உடனடி மனிதாபிமான உதவிகளை இந்தியாவே அதிகளவுக்கு வழங்கிவருவதால் புதுடில்லி இவ்விடயத்தில் செல்வாக்கைச் செலுத்தும் நிலையில் இருந்துள்ளது.

திருக்கேதீஸ்வர உற்சவத்தை காரணம்காட்டி, அதற்காக இந்தியாவிலிருந்து யாத்திரிகர்கள் வருவார்கள், அதன்மூலம் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டலாம் என முன்வைக்கப்பட்ட கருத்திலேயே பலாலியைத் திறப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியது.

பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையாகவுள்ள அந்நியச்செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கு உடனடியாக இருகக்கூடிய வழி உல்லாசப் பயணத்துறை தான். மின்சாரத் தடை, போக்குவரத்துப் பிரச்சினை, எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக அன்றாடம் வீதிகளில் இடம்பெறும் மோதல்கள் என்பன சுயமாக வரக்கூடிய உல்லாசப்பயணிகளின் வருகையைப் பெருமளவுக்குப் பாதித்திருக்கின்றது.

இந்த நிலையில் பிரசித்திபெற்ற கோவில் பைவங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படக்கூடிய பயணங்கள் ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியவையாக இருக்கலாம். பயணிகளைப் பெரமளவக்கு கவர்வதாகவும் அவை இருக்கும்.

திருக்கேதீஸ்வர கும்பாவிசேகத்தை முன்னிட்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்திய யாத்திரீகர்கள் வருவதற்கான 'விசேட கட்டண பக்கேஜ்' அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்திலுள்ள பிரபலமான சில பிரயாண முகவர்கள் இதனை முன்னெடுத்துவருகின்றார்கள்.

பலாலியிலிருந்து திருக்கேதீஸ்வரம் சென்றுவருவது, தங்குமிட வசதிகள் என்பனவும் அவர்களாலேயே செய்யப்படுவதால் யாத்திரீகர்கள் நம்பிக்கையுடன் வந்துசெல்லக்கூடிய நிலை உள்ளது.

இவற்றைவிட இன்னொரு கவர்ச்சியான விடயமும் இதில் உள்ளது. இந்தியா ரூபா ஒன்றின் பெறுமதி இப்போது 5 இலங்கை ரூபாய்களாக உயர்ந்திருக்கின்றது. அதுவும் இந்தியப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்றுதான்.

ஆனால், யாத்திரிகர்களாக வழிபாட்டுக்கென வருபவர்கள் அதிகளவு பணத்தை செலவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என சுட்டிக்காட்டுகின்றார் பொருளாதாரத்துறை நிபுணர் ஒருவர். அவர்கள் மலிவான தங்குமிடங்களையே தேடிச்செல்வார்கள். விலைகுறைவான சைவ உணவகங்களை விரும்புவார்கள்.

அதனால் இதன்மூலமாக அதிகளவுக்கு டொலர் உடனடியாக வரும் என எதிர்பார்க்கமுடியாது. களிப்பூட்டக்கூடிய சுற்றுலா மூலுமாகவே உடனடியாக அதிகளவு டொலரை சம்பாதிக்க முடியம். ஆனால், அதற்கான நிலை நாட்டில் இல்லை.

பலாலி திறக்கப்படுவதில் இன்னொரு பிரதிகூலமும் உள்ளது. 'குருவி'கள் மூலமாக அதிகளவு பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரலாம். இதனைக் கட்டுப்படுத்துவது கடினம். இது மறைமுகமான ஒரு இறக்குமதியாக இருப்பதால், அந்நியச்செலாவணி அதிகளவுக்கு வெளியே செல்வதற்கு இது வழிவகுக்கும்.

விமானக் கட்டணமும் அதிகமாக இருப்பதால், தமிழகம் சென்றுவருபவர்கள் அதனை ஈடுகட்டக்கூடிய வகையில் அதிகளவு பொருட்களைக் கொண்டுவர முற்படுவார்கள். ஆக, உடனடியாக இதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகளவுக்கு உள்ளே வரும் என எதிர்பார்க்க முடியாது.

இருந்தபோதிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடுத்துவரும் மாதங்களில் அதிகளவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பலாலி திறக்கப்படுவது ஒரு திருப்புமுனையாக அமையலாம். கட்டுநாயக்காவில் வந்து இறங்கும் ஒருவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்வதற்கு இப்போது சுமார் 50 ஆயிரம் ரூபாவை வாகனத்துக்குக் கொடுக்கவேண்டியுள்ளது.

அவர்கள் சென்னைக்கு 'ட்ரான்ஸிற்'றில் வந்து பலாலி வரமுடியுமாக சுமார் ஒரு இலட்சம் ரூபாவை அவர்களால் சேமிக்க முடியும். தற்போதைய நிலையில் இது போக்குவரத்துச் சிக்கல்களையும் குறைக்கும் என்பதால், தயங்கிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த மக்கள் இதனால் கவரப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலமாகவும் கணிசமான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பலாலி விமான நிலையம் இப்போது அவசரம் அவசரமாக திறக்கப்படுகின்றது. இதன்மூலமாகப் பெறப்படக்கூடிய பொருளாதார நலன்கள் பல உள்ளன. நேர்த்தியான ஒரு திட்டமிடல் மூலமாக இதனைச் செய்யமுடியும். தமிழர்கள் இதன்மூலமாக நலன்களைப் பெறுவார்கள் என்ற கண்ணோட்டத்துடன் அரச அதிகாரிகள் இதனைப் பார்க்காமல் செயற்பட்டால் அந்த நலன்களை பெறமுடியும்.

அதேவேளையில், விமானப் போக்குவரத்தில் ஏகபோகமாக இல்லாமல், மேலும் ஒரு - இரு விமான நிறுவனங்களும் இந்த சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கினால், விமானக் கட்டணம் பெருமளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் பலாலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதற்கான அழுத்தங்களைத் தமிழத் தரப்பினர் கொடுக்க வேண்டும்.