நடிகர் விஜய்யின் 49ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் தயாராகி வரும் 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் 22 ஆம் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்டது. இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக அவர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழில் வெளியான 'தோழா' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வாரிசு'. இதில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். எஸ். தமன் இசைறமைக்கிறார். தமிழ் பற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வம்சியுடன் இணைந்து ஹரி மற்றும் அலிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

 தமிழ் பதிப்பிற்கான கூடுதல் திரைக்கதை வசனத்தையும், பாடலையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று மாலை 'வாரிசு' படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜயின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதாலும், செகண்ட் லுக்கில் சிறார்களுடன் உற்சாகமாக தோன்றுவதாலும், 'வாரிசு' என்ற படத்தின் தலைப்பிற்கு கீழ் 'தி பாஸ் ரிட்டர்ன்ஸ்' என எழுதி இருப்பதாலும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் கூடுதலாக உற்சாகமடைந்திருக்கிறார்கள். மூன்றாவது போஸ்டரிலும் தளபதி விஜய் தனித்துவமான அடையாளத்துடன் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.