(மா. உஷாநந்தினி)

ழத்து எழுத்தாளரும், ஓய்வுநிலை இலங்கை திட்டமிடல் சேவை பணியாளரும், கொழும்பு தமிழ்ச் சங்க உறுப்பினருமான திரு. தம்பையா அரியரத்தினம் எழுதி வெளியிட்டுள்ள மூன்றாவது நூல் 'இலங்கை தமிழர்களின் புலம்பெயர்வும் வாழ்வியலும்'. 

இவர் முன்னதாக 'கர்ச்சனா', 'அனலைதீவு ஆலயங்களின் வரலாறு' என இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையை தாய்நாடாக கொண்ட தமிழர்கள் கடந்த காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று, அந்நாடுகளில் தாம் பெற்ற அனுபவங்களை, அடைந்த வலிகளை, அந்த மக்களின் வாழ்வியல் அம்சங்களை பதிவு செய்திருப்பது, நூலாசிரியரின் புதிய முயற்சி. 

'இலங்கை தமிழர்களின் புலம்பெயர்வும் வாழ்வியலும்' எனும் நூல் கடந்த 19ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 

பேராசிரியர் வ. மகேஸ்வரனின் தலைமையில், திருமதி. பவானி முகுந்தனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளரான உடுவை எஸ். தில்லை நடராஜா, கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவரான சட்டத்தரணி திரு. நடராஜா காண்டீபன், கொழும்பு திறந்த பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி ச. பத்மநேசன், மனவளக்கலை பேராசிரியர் திரு. அருள்நிதி முருகானந்த வேல், தென் கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன், சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஜீ. இராஜகுலேந்திரா, கொழும்பு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.

சைவ மங்கையர் கழக மாணவி செல்வி. தில்ஷா கிருஷ்ணகுமாரின் தமிழ் வாழ்த்தினை தொடர்ந்து திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். 

நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்களை நூலாசிரியர் கௌரவித்தார்.

அடுத்து. உடுவை எஸ். தில்லை நடராஜா வாழ்த்துரை வழங்கினார். 

நாட்டில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வரிசைகளை பார்க்கிறபோது, இருபது ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவில் தான் கண்ட காட்சியை விபரித்தார். 

வார இறுதி நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, வியாழக்கிழமையே தங்கள் வாகனங்களில் பெற்றோலை நிரப்பிக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதை காண முடியும். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்களாகவே இருந்தனர். 

அந்நாட்டின் நிலவரப்படி, விடுமுறை நாட்களில் எரிபொருள்களின் தேவை அதிகரிக்கப்படும்போது அவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுவிடும் என்பதால் நிலைமையை முன்கூட்டியே எமது மக்கள் உணர்ந்து செயற்பட்டதாக கூறினார். 

மேலும், ஆரம்ப காலங்களில் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் பஸ் தரிப்பிடங்களில் தங்கியிருந்துள்ளனர். தரைவிரிப்பு இன்றி வீதியில் வெறுந்தரையில் உறங்கியுள்ளனர். பொது மலசல கூடங்களை பயன்படுத்தியுள்ளனர். 

எமது மக்கள் வெறுங்கையோடு வேற்று நாடுகளுக்கு சென்றபோதும், தமக்குள் இருந்த தன்னம்பிக்கையால் கடுமையாக உழைக்கத் தொடங்கினர் எனவும் தெரிவித்தார். 

திரு. நடராஜா காண்டீபன் உரையாற்றுகையில்,

"நாட்டின் அரசு ஒழுங்கற்று இருப்பதால் தான் மக்கள் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்றனர் என்பதை நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். எனவே, ஈழத் தமிழர்களின் வாழ்வியலில், வரலாற்றில் இந்நூல் ஒரு பதிவாகிறது..." என்றார்.

பேராசிரியர் அ. மகேஸ்வரன் தனது உரையில், தமிழக எழுத்தாளர் கி.ரா.வின் (கி. ராஜநாராயணன்) 'கோபல்ல கிராமம்' என்ற நாவலையும் தொட்டுச் சென்றார். 

"தெலுங்கு தேசமான ஆந்திராவை சேர்ந்த பெருந்திரளான மக்கள் தமிழ்நாட்டில் உள்ள கரிசல் காட்டுப் பகுதிகளில் புலம்பெயர்ந்து தங்கி, பின்னர் அங்கேயே விவசாயத்தை மேற்கொண்டு வாழ்ந்தனர். 

அவர்களது புலம்பெயர்வுக்கு காரணம் 'சிறையெடுத்தல்'. 

அந்த மக்கள் முன்பு வாழ்ந்த ஊரில், சமஸ்தான மன்னர்கள் அப்பிரதேசத்தில் உள்ள அழகான பெண்களை, அந்தப் பெண்களினதும், அவர்களது பெற்றோரினதும் விருப்பமின்றி, 'சிறையெடுத்து' வந்து, அந்தப்புரத்தில் தங்கள் ஆசை நாயகிகளாக இருக்க பணிப்பார்களாம்.

இதனால் அந்த மன்னர் வம்சத்தினரிடமிருந்து தம் பெண்களை காப்பாற்றிக்கொள்வதற்காகவே மக்கள் புலம்பெயர்ந்தனர்....." என்றவர், 

நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்ற மக்கள் அந்நாட்டில் தாம் அடைந்த வலிகளையும் துயர சம்பவங்களையும் எழுத்து வடிவில் வெளிப்படுத்தியதன் மூலமே 'புலம்பெயர் இலக்கியங்கள்' உருவானதாக தெரிவித்தார். 

கலாநிதி ச. பத்மநேசன் நிகழ்த்திய வெளியீட்டுரையில், 'புலச்சிதறல்' அல்லது 'புலம்பெயர்வு' என்ற பதத்துக்கு பொருத்தமான 'Diaspora'  என்ற ஆங்கில பதத்தை விளக்கினார். 

அந்த வகையில் கிரேக்கர்கள் மற்றும் யூதர்களின் புலம்பெயர்வுகளே ஆரம்ப கால புலம்பெயர்வுகள் என்றார். 

"இடம்பெயர்ந்து சென்ற மக்கள் சிந்தனையை, தமது வாழ்வியலை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள முற்படுகையில், தங்களுக்கான அடையாளங்களை தேடுபவர்களாகவும் இருந்துள்ளனர். 

எனவே, புலம்பெயர்வு பற்றிய புதிய பல கோட்பாடுகள் மற்றும் ஆய்வு முறைகளை பெற்ற ஒரு வழிக்குமிழாக இந்நூலை நாம் காணலாம்" என்றும் அவர் தெரிவித்தார். 

வெளியீட்டுரையை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. 

நூலாசிரியரோடு இணைந்து திரு. த. மகேஸ்வரன் நூலினை வெளியிட, முதல் பிரதியை மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி முருகானந்தவேல் பெற்றுக்கொண்டார். 

அடுத்து, சிறப்பு பிரதிகளை திரு. இ.சிறிதரன், திரு. த. நந்தனன், திரு. வேலாயுதம் இரட்ணவேல் ஆகியோர் பெற்றனர்.

மேலும், மதிப்பீட்டுரை ஆற்றிய கலாநிதி க. இரகுபரன், புலம்பெயராத மக்களை கொண்ட நாடு என்பதே ஒரு நாட்டின் பெருமை... என்றதோடு, சிலப்பதிகாரத்தை உதாரணம் காட்டினார்.

"'பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய 

பொது அறு சிறப்பின் புகாரே...' என பூம்புகாரை பற்றி இளங்கோ கூறுகிறார்.

எந்த காரணத்துக்காகவும் இந்த பூம்புகார் ஊரில் உள்ள மக்கள் அந்த ஊரை விட்டு புலம்பெயர்ந்து போனதே கிடையாது... என்பதை இப்பாடல் சொல்கிறது. 

மக்கள் ஒரு நாட்டையோ அல்லது ஊரையோ விட்டு வெளியேறுகிறார்கள் என்றால், அந்த நாட்டில் குறையுண்டு என்றே அர்த்தம். 

அரசியல் ஒடுக்குமுறை, பொருளாதார சிக்கல், பஞ்சம், நீதி அடிப்படையிலான அராஜகம் போன்ற காரணங்களுக்காக நாட்டை விட்டுச் செல்வதுண்டு.

நீதியான, வளமான ஒரு நாட்டை விட்டுச் செல்ல மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

அண்மைக்காலமாக நமது மக்கள் நாட்டை விட்டுச் செல்வதில் மும்முரமாக உள்ளனர். 

புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் வேறு நாடுகளில் அகதி அந்தஸ்தை பெறுவதையே பெருமையாக நினைக்கின்றனர். 

இலங்கையில் உள்ள 'இந்திய வம்சாவளி தமிழர்கள்' கூட தங்கள் பிரகாசமான எதிர்காலம் குறித்த கனவோடு இந்நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்து, பின்னர் ஏமாற்றமடைந்தவர்கள் தான். 

சொந்த மண்ணை விட்டு பிற தேசங்களில் வாழும் இந்த தமிழர்களின் நிலையை பாரதியாரும் வருத்தத்தோடு பாடுகிறார்....." என்றார்.  

போற்றியுரை வழங்கிய திரு. ஜீ. இராஜகுலேந்திரா, 

"மனிதன் தோற்றம் பெற்ற நாளிலிருந்து இடம்பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறான். எனினும், இந்த புலம்பெயர்வு இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக தமிழர்களுக்கே ஏற்பட்ட துன்பம்.

போர்ச்சூழல் ஏற்படுத்திய கட்டாயத்தில், அவல நிலையின்போது மக்கள் புலம்பெயர்ந்தனர். உண்மையே. ஆயினும், அவர்களில் பெரும்பாலானோருக்கு நம் மண் குறித்த இலக்கு ஏதுமில்லை. 

இந்தியாவில் கீழடி போல் இங்கேயும், குறிப்பாக, வடக்கிலும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடியும். எனினும், முடியாதிருக்கிறது. இதைப் பற்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திப்பதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை..... அந்த வகையில் இந்த நூல் இனிவரும் சந்ததியினருக்கு ஒரு பதிவாக உள்ளது..." என புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அடுத்து, நூலாசிரியர் தனது ஏற்புரையோடு நன்றியுரையையும் வழங்குகையில்,

"புலம்பெயர்ந்த மக்கள் ஆரம்பத்தில் கடினமான சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டிருந்த போதும் பின்னாட்களில் அவர்கள் இன்பகரமானதாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். 

நாட்டின் அசாதாரண சூழலில் சிறந்த உற்பத்தியிடல் மூலம் பொருளாதாரத்தை பெருக்குவதற்கு 'திட்டமிடல்' மிக முக்கியம். இந்த திட்டமிடலின்போது தம்மாலான முதலீடு செய்து பங்களிக்க, புலம்பெயர்ந்த மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும், தற்போதைய நாட்டு நிலைமையில் இது பெரும் சவாலான விடயம்..." என தெரிவித்தார். 

நிகழ்வு நிறைவுறும் வேளை, தாமாக முன்வந்து கருத்துரை வழங்கிய கொழும்பு திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கஜலட்சுமி, 

"எங்கோ வாழ்ந்த யூத மக்களின் புலம்பெயர்வு பற்றி பேசுகிறோம். அந்த மக்களின் இடம்பெயர்வுக்கு கொடுக்கும் மரியாதையை சொந்த மக்களின் புலம்பெயர்வுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம். இங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்....." என்பதாக தொடர்ந்த அவரது உரையோடு நிகழ்வு நிறைந்தது. 

படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்