இலங்கை - இந்திய இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ‘செகன்ட் ஷோ’ திரைப்படத்தின் இசையமைப்பாளரான பிரனீவ் வேள் உடனான ஒரு சந்திப்பு...

அறிமுகம்

15 வருடங்களாக இசைத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன். சூரியன் FM, வர்ணம், ஆதவன் போன்ற ஊடகம் சார்ந்த துறைகளிலும் பணியாற்றி இருக்­கின்றேன். இது தவிர சூரியன் FM, வர்ணம் FM, கனடாவில் இயங்கி வரும் CMR Tamil HD வானொலி மற்றும் பல வானொலிகளுக்கான நிலை குறியிசை­யினை அமைத்துக் கொடுத்­துள்ளேன். தற்போது இலங்கை - இந்திய இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ‘செகன்ட் ஷோ’ திரைப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன்.

உங்கள் இசைப் பயணத்தின் ஆரம்பம்...

பாடசாலை காலத்திலேயே இசை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. 2006ஆம் ஆண்டு கொ/இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்றபோது அல்­பம் ஒன்றினை வெளியிட்டேன். அதற்கு பாடசாலை நிர்வாகமும் அதிபர், ஆசிரியர், சக மாணவர்கள், நண்பர்கள் என பலரும் ஊக்குவித்தனர். எனினும், எனது அண்ணா பிரஜீவ் வேள் இசையமைப்பதை பார்த்தே இசை மீதான இன்னும் அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது எனலாம்.

அதன் பின்னரும் தொடர்ந்த எனது இசைப் பயணத்தில், இலங்கையில் இயங்கிவரும் பல வானொலிகளுக்கு நிலைய குறியிசையினை அமைத்துக் கொடுத்துள்ளேன். இது தவிர, குறும்படங்­களுக்கும் அல்பங்களுக்கும் கூட இசைய­மைத்துள்ளேன்.

‘செகன்ட் ஷோ’ திரைப்படத்­துக்கு இசையமைக்கும் வாய்ப்பு எவ்வாறு கிட்டியது?

நான் ஆதவன் தொலைக்காட்சி­யில் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்­பகுதியில் ‘செகன்ட் ஷோ’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான கௌசல்யா விக்ரமசிங்கவின் அறிமுகம் கிடைத்தது.

அவர் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வேலைக்காக வந்திருந்தார். அப்படத்தின் ப்ரொமோஷன் பற்றி கலந்துரையாடிய போது நான் ஒரு இசையமைப்பாளர் என தெரியவரவே, அவர் என்னிடம் ‘செகன்ட் ஷோ’ திரைப்படம் பற்றி கூறி, 'வாய்ப்பு கொடுத்தால் பணியாற்றுவீர்களா" என்று கேட்டார். நானும் 'சரி" என்றேன். இவ்வாறுதான் ‘செகன்ட் ஷோ’ திரைப்­படத்தில் இசையமைப்பாளராக பணி­யாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

‘செகன்ட் ஷோ’ திரைப்படத்துக்காக இசையமைத்த அனுபவம்...

‘செகன்ட் ஷோ’ திரைப்படம் ஒரே நேரத்­தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளில் திரைக்கு வருகின்றது. இதில் தமிழில் இரண்டு பாடல்கள், சிங்களத்தில் இரண்டு பாடல்கள் என நான்கு பாடல்­களுக்கு இசையமைத்துள்ளேன். இதே படத்தில் Dr. அம்பி சுப்ரமணியம் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இதற்கு முன்னர் நான் பல குறுந்திரைப்­படங்களில் பணியாற்றியுள்ளேன். எனினும், ஒரு முழு நீள திரைப்படத்தில் பணி­யாற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

இது இலங்கை - இந்­திய இணை தயா­ரிப்பு என்பதால் சில சமயங்களில் பாட­லுக்­­கான சூழலை பற்றி இந்தியாவில் பணி­யாற்றுவோருடன் தொலைப்பேசியின் ஊடாகவே கலந்துரையாடும் நிலை ஏற்­பட்டது. இவ்வாறு கலந்துரை­யாடும்­­போது பாடலுக்­கான காட்சியினை உள்­வாங்­கிக்­கொள்­வதில் சற்று சிரமங்கள் ஏற்­படி­னும் கூட கௌஷி விக்ரமசிங்க அவர்­­களின் உதவி­ யுடன் பணியை தொடர முடிந்தது.

இந்தப் படத்துக்கான பாடல்களை இசையமைக்கும்போது எதிர்கொண்ட சவால்கள்...

இலங்கையை பொருத்தவரையில், காட்சிக்கு ஏற்­புடையதாக இரண்டு, மூன்று மெட்டுகளை போட்டு, அதில் ஒன்றை தெரிவு செய்துகொள்­வோம். எனினும், இந்த படத்துக்கு பத்துக்கு மேற்பட்ட மெட்டு­களை போட்டு, அதனை படக்குழுவினர், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடி, சிறந்த மெட்டினை தேர்ந்­தெடுத்தே பாடல்களை செய்தோம். 

இந்த பாடல்களுக்கு இசையமைக்க இரண்டு நாட்கள் மட்டுமே எடுத்துக்­கொண்­டேன். இதற்காக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே, இந்திய இசைக் கலை­ஞர்களுடனேயே பணியாற்றியது, எனது இசை வாழ்க்கையில் சிறந்த அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக, இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜின் இசைக்குழுவில் உள்ள சவுன்ட் இஞ்ஜினீயர் டேனியலுடன் இதற்கு முன்னர் பணியாற்றிய அனு பவம் இருந்த­மையால், இந்தப் படத்தில் வேலை செய்ய மிக இலகுவாக இருந்­தது. அத்துடன் இசைக் கலை­ஞர்­­களாக இருக்கட்டும், பாடகர்களாக இருக்கட்டும், அவர்கள் தங்கள் பணியில் மிகவும் கவன­மாக இருக்கின்றனர்.

இந்த படத்தில் பாடகி சின்மயி ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் வெளி­நாடொன்றுக்கு சென்று நாடு திரும்பிய நிலையில் நேரே கலையகத்துக்கு வந்து, பாடலை பாடிக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது தவிர பாடகர் சுதாகர் மற்றும் பல இந்திய பாடகர்களும் பாடியுள்ளனர்.

இலங்கையில் வெளிவரும் பாடல்­கள் மக்களிடத்தில் எத்தகைய வர­வேற்பை பெறுகின்றன?

இன்றும் இந்திய திரைப்பட பாடல்க­ளுக்கு இணையாக இலங்கையில் எத்த­னையோ பாடல்கள் வெளிவரு­கின்றன. எனினும், அந்த பாடல்கள் மக்­களை சென்றடைவதிலேயே அது பிரபல­மடை­வதன் தன்மை உள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்கள் சினிமா பாடல்களை அனைத்து விதமான ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கின்றன. ரசிகர்களும் தங்கள் ரசனைக்கு ஏற்ப சில பாடல்களை கொண்டாடி, அவற்றை வைரலாக்கியும் விடுகின்றனர்.

 பாடல்களுக்கான மெட்டு ரசிகர்­களை சென்றடைய என்ன செய்ய வேண்டும்?

பாடல்களுக்கான இசையை நாம் நம் ரசனையில் இருந்து தீர்மானிக்காமல், ரசிகர்களின் ரசனைக்கு தக்கதாய் தெரிவு செய்ய வேண்டும். அத்துடன் படம், பாடல் எதுவாக இருப்பினும், அது காலத்துக்கேற்ற கதை, காட்சிகளோடு வெளி வரும்போது, அந்தப் பாடலும் அதன் மெட்டும்  ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும்.

- ஸ்ரீபா