சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் 'பிரின்ஸ்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு திரை உலக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் திரைப்படம் 'பிரின்ஸ்'. இதில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டு நடிகை மரியா ரியாபோஸ்க்வா நடிக்கிறார்.‌ சத்யராஜ் மற்றும் ப்ரேம்ஜி அமரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, எஸ். எஸ். தமன் இசையமைக்கிறார். 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி என்ற திரைப்பட நிறுவனமும், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படம் எதிர் வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக படக்குழுவினர் பங்குபற்றும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி திருநாளில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'சர்தார்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்படடிருக்கிறது. அதே திகதியில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'பிரின்ஸ்' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அஜித் குமார் நடிப்பில் தயாராகிவரும் 'ஏகே 61' எனும் படமும், ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் 'அகிலன்' எனும் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தீபாவளி நட்சத்திர நடிகர்களின் படங்கள் அதிகளவில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.