ஜனாதிபதியை மீண்டும் தவறான முறையில் வழி நடத்தியுள்ளார்கள் : அரசிடம் எவ்வித திட்டமும் கிடையாது ; விமல் வீரவன்ச

By Vishnu

21 Jun, 2022 | 04:41 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும், நிமல் லன்ஷாவுடன் சுயாதீனமாக செயற்பட்ட தரப்பினரும் எதற்கும் பயனற்றவரை பிரமராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியை மீண்டும் தவறான முறையில் வழி நடத்தியுள்ளார்கள்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது, அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் போது தற்போதைய நெருக்கடி கள் தொடர்பில் முன் கூட்டியதாகவே அறிவித்ததை தொடர்ந்து அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டோம்.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடையும் ஆரம்பம் எம்மை பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆரம்பமானது.

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து 11 அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சிகளை ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து தேசிய சபை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த யோசனைகளை முன்வைத்தோம்.குறுகிய காலத்தில் பொதுத்தேர்தலுக்கு செல்வது குறித்தும்  அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

 சகல தரப்பினரையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்த வேளை துரதிஷ்டவசமாக  அரசாங்கத்தில் தற்போது அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும்,கடந்த நாட்களில் சுயாதீனமாக செயற்பட்ட தரப்பினரும் இரவிரவாக  ஜனாதியிடம் சென்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும்,நிமல் லன்ஷாவுடன் சுயாதீனமாக செயற்பட்ட தரப்பினரும் எதற்கும் பயனற்ற வரை பிரமராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியை மீண்டும் தவறான முறையில் வழிநடத்தியுள்ளார்கள்.எழுப்பும்  பிரச்சினைகளுக்கு பதிலளிக்கவும் பிரதமர் சபைக்கு சமுகமளிக்கவில்லை.

நாடு பிரச்சினைகளினால் சூழ்ந்துள்ளது.பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது. ரணில் விக்கிரமசிங்க பிரதராக பதவியேற்றால் பில்லியன் கணக்கில் டொலர் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டது  வெறும் மாயையாக உள்ளது.

விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியாத விவசாய அமைச்சும்,பாடசாலைகளை மீள திறந்து மாணவர்களுக்கு கல்வி வழங்காத கல்வி அமைச்சும்.எரிபொருள் மற்றும் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத அமைச்சும் பயனற்றது.எப்பிரச்சினைக்கும் அரசாங்கத்திடம் தீர்வு கிடையாது.ஆகவே அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவது வெறுக்கத்தக்கது.மக்களின் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுவதற்கு பாராளுமன்றம் மாத்திரமே களமாக உள்ளதால் ஒருவார காலத்திற்கு எம்மால் விடுமுறை எடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right