(நெவில் அன்தனி)

இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புளையில் நடைபெறவுள்ள தலா 3 போட்டிகள் கொண்ட இருவகை மகளிர் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு சமரி அத்தப்பத்து தலைமையிலான 19 வீராங்கனைகள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழாத்தில் சிரேஷ்ட வீராங்கனைகள் பலர் இடம்பெறுவதுடன் சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமரி அத்தபத்து, நிலக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா, ஹன்சிமா கருணாரட்ன, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, ஹசினி பெரேரா, உதேஷிகா ப்ரபோதனி, ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர, அனுஷ்கா சஞ்சீவனி  ஆகிய சிரேஷ்ட வீராங்கனைகள் இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அவர்களில் சிலருக்கு இந்தத் தொடரும் பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழா இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் கடைசி தொடர்களாக அமையும் என நம்பப்படுகிறது.

குறிப்பாக 36 வயதைக் கடந்துள்ள உதேஷிகா ப்ரபோதனி, ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர ஆகியோர் இந்த இரண்டு தொடர்களுடன் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறக்கூடும் என கருதப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, மல்ஷா ஹேஹானி, ஹர்ஷிதா மாதவி, காவிஷா டில்ஹாரி, விஷ்மி குணரட்ன, சத்யா சந்தீப்பனி, தாரிகா செவ்வந்தி, ரஷ்மி டி சில்வா, கௌஷானி நுத்யங்கன  ஆகிய இளம் வீராங்கனைகளும்  குழாத்தில்   பெயரிடப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்தும் கிரிக்கெட் தொடராக மகளிர் இருபது 20 தொடர் அமையவுள்ளது.

அதேவேளை,  2022 - 2025 பருவகாலத்துக்கான ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடராக   இருதரப்பு மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அமையவுள்ளது.

ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான முதலாவது தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அத் தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கு இது முதலாவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடராக அமையவுள்ளது.

இதேவேளை, இருவகை தொடர்களிலும் பங்குபற்றவுள்ள ஹார்மன்ப்பரீத் கொர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இந்திய மகளிர் இருபது 20 குழாத்தில் ஹார்மன்ப்ரீத் கோர் (தலைவி), ஸ்ம்ரித்தி மந்தானா, சிம்ரன் பஹதூர், யஸ்டிக்கா பாட்டியா, ராஜேஷ்வரி கயக்வாட், ரிச்சா கோஷ், சப்பினேனி மெகானா, மேக்னா சிங், பூணம் யாதவ், ரேனுகா சிங், ஜெமிமா ரொட்றிகஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரேக்கார், ராதா யாதவ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இந்திய மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் ஹார்மன்ப்ரீத் கோர் (தலைவி), ஸ்ம்ரித்தி மந்தானா, சிம்ரன் பஹதூர், யஸ்டிக்கா பாட்டியா, தானியா பாட்டியா, ஹார்லீன் டியோல், ராஜேஷ்வரி கயக்வாட், ரிச்சா கோஷ், சப்பினேனி மெகானா, மேக்னா சிங், பூணம் யாதவ், ரேனுகா சிங், ஷவாலி வர்மா,  தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரேக்கார் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 23, 25, 27ஆம் திகதிகளிலும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 1, 4, 7ஆம் திகதிகளிலும் தம்புளையில் நடைபெறும்.