தேசியன்

இலங்கை தொழிலாளர்  காங்கிரஸின்  தலைவர் செந்தில் தொண்டமான் கட்சியை சீர்திருத்தங்களுக்குள்ளாக்கும் தனது முயற்சியில் அதிரடியாக சில விடயங்களை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது. அதில் முதலாவதாக ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடும் கட்சியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்தே நீக்குவதற்கான  முடிவை எடுத்துள்ளார்.  இதில் முதலாவதாக மாட்டிக்கொண்டிருப்பவர் நுவரெலியா பிரதேச சபை தலைவராக செயற்பட்ட  வேலு யோகராஜ் ஆவார். 

இ.தொ.காவின் ஆட்சியின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஆறு  உள்ளூராட்சி மன்றங்களில் அதிக குற்றச்சாட்டுகளையும் முறைப்பாடுகளையும் சுமந்து கொண்டிருக்கும் சபையாக நுவரெலியா பிரதேச சபை உள்ளது. சபைத்தலைவர் வேலு யோகராஜ் மீது பல குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக  முன்வைக்கப்பட்டாலும் கூட இ.தொ.கா வின் சிரேஷ்ட  உறுப்பினர்கள் சிலர் அதை மூடி மறைக்கும் செயற்பாடுகளிலேயே கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தனர். காரணம் அந்த ஊழல்களில் அவர்களுக்கும் பங்கியிருந்தது. 

எனினும் அமரர் ஆறுமுகன் ஆரம்பித்த சில மக்கள் திட்டங்களை  தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் இலாபம் பார்த்த மேற்படி பிரதேச சபைத்தலைவர், கந்தப்பளை கொங்கோடியா தோட்ட 80 பேர்ச் காணி விவகாரத்தில் வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார். நுவரெலியா பிரதேச சபையின் கீழ் வர வேண்டிய இந்த காணி தனியாருக்கு பல கோடி ரூபாய்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினர்கள் பலரும் இருப்பது தலைமைக்கு தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்தாது விட்டு விடும்படி தலைவர் செந்தில் தொண்டமானுக்கே எச்சரிக்கை கலந்த தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அவரே ஒரு பத்திரிகை நேர்காணலில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

எனினும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வளங்களும் ஏனைய விடயங்களும் தனி நபர்களின் வர்த்தக நோக்கத்துக்கு செல்வதை கண்டித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் , இவ்விடயத்தில் எந்த வித பாரபட்சமும் பார்க்காது, பிரதேச சபைத் தலைவரை விசாரணைக்குட்படுத்தி அவரை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியுள்ளார்.

இனி எந்த கட்சியினதும் பெயரின்றி அவர் வெறும் பிரதேச சபை தலைவராக விளங்க முடியாது. தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நினைத்தால் தவிசாளர் பதவியை பறிக்க முடியும். அதை செய்ய வேண்டும் என கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடு இருப்பவர்கள் விரும்புகின்றனர்.

 இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப்பிறகு தொடர்ச்சியாக மக்கள் பணத்தையும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டையும் தவறான வழிகளில் பயன்படுத்தி  தமக்கு சொத்துகள் வாங்கிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ,உபதலைவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளாராம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான். உள்ளூராட்சி சபைகளுக்கான காலம் முடிவடைவதற்கு முன்பதாக  மாடி வீடுகள் கட்டியவர்கள், ஏக்கர் கணக்கில் காணிகள் வாங்கியவர்கள், கடைத்தொகுதிகளை அமைத்தவர்கள், வாகனங்கள் வாங்கியவர்கள் என பலரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனவாம். 

இதனால் சில உள்ளூராட்சி சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலங்கிப்போய் உள்ளதாக மலையக பகுதிகளிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் நுவரெலியா மாவட்ட அரசியலில் தலையிட வேண்டாம் என மறைமுகமாக  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு செய்திகள் பறந்தாலும் அதை பொருட்படுத்தாத அவர், கட்சியில் உள்ள களைகளை முழுமையாக அகற்றுவதாக  உறுதி பூண்டுள்ளாராம். இவரின் இந்த அதிரடி முயற்சியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் வரவேற்றுள்ளனராம். அவருக்கு நேரடியாக தொலைபேசியில் அழைப்பெடுத்து இது குறித்து பாராட்டுதல்களை வெளிப்படுத்தியுள்ளனராம்.  

 இதே வேளை நுவரெலியா பிரதேச சபை தலைவரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட கந்தப்பளை, நானுஓயா, இராகலை பகுதி வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் இ.தொ.கா தலைமைத்துவத்தின் முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனராம். அரச காணிகளை ஆக்கிரமித்து அதை தனியாருக்கு விற்பது மாத்திரமின்றி  அவரின் பல சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தற்போது  விடயங்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதே வேளை நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை பிரதேச சபை , கொட்டகலை கொட்டகலை பிரதேச சபை , அட்டன் –டிக்கோயா நகர சபை, நோர்வூட் பிரதேச சபை. மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டுக்குள் இது நாள் வரை முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பிலும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள் பற்றியும் சகல தகவல்களையும்  இ.தொ.கா தலைமை கேட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. 

மேலும் இந்த சபைகளின் தலைமைகளின் சொத்து விபரங்களையும் ஒப்படைக்கும்படியும் கேட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனாலும் ஊழல் , துஷ்பிரயோகங்களில் தொடர்புடைய சில உயர் மட்ட உறுப்பினர்கள், தலைமைத்துவம் தொடர்பில் தவறான கருத்துக்களை நுவரெலியா மாவட்ட தோட்ட  மக்களிடம் பரப்ப ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகின்றது.  எனினும் தலைமைத்துவமே நேர்மையாக இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் போது  ஏனையோர் ஏன் அது குறித்து கவலைப்பட வேண்டும் என்றவாறு தொழிலாளர்களும் தலைமைத்துவத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளனர். 

 கட்சியின் நற்பெயருக்கு எந்த வகையிலும் களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் எந்த பதவி நிலையிலிருந்தாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்  உறுதியாக கூறியதையடுத்து, ஊழல் செயற்பாடுகளில் கடந்த காலங்களில் ஈடுபட்ட பல உறுப்பினர்கள்  கதிகலங்கி நிற்பதாகத் தெரிகின்றது. அவர்களில் பலர் இனி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம் என தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டுள்ளதாகத் தெரிகின்றது. எது எப்படியானாலும் மலையக மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், அரசியல் இருப்பு போன்றவற்றை  கடந்த 80 வருடங்களுக்கு மேல் கட்டிக்காத்து வரும் இ.தொ.கா என்ற  பாரிய அமைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில்  புதிய தலைமையின்  செயற்பாடுகள் இன்றியமையாததாக உள்ளன. இவ்விடயத்தில் அவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது கட்சியின் பழைய உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் அவாவாக உள்ளது.