புலிகளின் முன்னுதாரணம்

Published By: Digital Desk 5

20 Jun, 2022 | 03:46 PM
image

என்.கண்ணன்

போருக்கும் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.  இரண்டிலுமே தோற்றுப்போனால், இலகுவில் மீள முடியாது. அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு நீண்டகாலம் தேவைப்படும். 

அதற்காக பெரும் விலைகளையும் செலுத்த வேண்டியிருக்கும். போரை நடத்துவதற்குப் பொருளாதாரம் உறுதியாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் தளர்ச்சி ஏற்பட்டால், போரும் தளர்ந்து போகும்.

மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரில், இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றது, ஆனால், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் தோற்றுப் போய் விட்டது.

உடனடியாக இல்லாவிட்டாலும், போர்க்காலத்தில் பெறப்பட்ட கடன்கள் பெருகிப் பெருகி, ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகள், மோசமான நிர்வாகம் என்பனவற்றினால் நாடு இன்று கடனில் மூழ்கி விட்டது.

கிட்டத்தட்ட வங்குரோத்து நிலையை நாடு அடைந்து விட்டது. வெளியில் இருந்து டொலர்கள் கிடைத்தால் மட்டுமே, எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.

இவ்வாறான நிலையில் தான் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தயார்படுத்தல்கள் அவசியம்.

இதற்கு தயார்படுத்தல் என்பது, ஆற அமர இருந்து யோசித்து, திட்டங்களை தீட்டி தயாராவது என்று பொருள் கொள்ள கூடாது. அவசரகால அடிப்படையில், போர்க்கால தயார்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்த போர்க்காலத் தயார்படுத்தல் என்று வரும் போது, விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் செயற்பட்ட முன்னுதாரணமான செயல்முறைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை முன்னுதாரணமாக கொள்வதென்பது அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

ஆனால், எது பொருத்தமான யோசனையோ அதனை எங்கிருந்தென்றாலும் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

விடுதலைப் புலிகளின் போர்க்கால அணுகுமுறைகள் பலவற்றை இன்றைக்கும் பயன்படுத்தும் அரசாங்கம், பொருளாதாரப் போருக்கும் அந்தக் கால செயற்பாடுகளை முன்னுதாரணமாக கொள்வதில் தவறில்லை.

1980களின் தொடக்கத்தில், அரச படைகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்ட போதே, தமிழ் இயக்கங்கள், பொருளாதார தற்சார்பு நிலையிலும் கவனத்தை செலுத்தின.

அந்தக் காலகட்டத்தில், தமிழ் இயக்கங்கள் மத்தியில், குறிப்பிட்டதொரு காலத்துக்குள் தனிநாட்டை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை காணப்பட்டது. அல்லது அவ்வாறான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு அவர்களால் ஊட்டப்பட்டிருந்தது.

தமிழீழத்தைப் பெற்று விட்டால், உடனடியாக வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது, மக்களை பட்டினிச் சாவில் இருந்து பாதுகாக்க, உள்ளூர் உற்பத்திகளை பெருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும், பிரசாரங்கள் அப்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ஈரோஸ் போன்ற அமைப்புகள் அப்போது. பொருளாதார உறுதிப்பாட்டின் மீது கவனம் செலுத்தின.

அது தொடர்பான கைநூல்கள், பிரசுரங்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கான தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்னரே, பொருளாதாரப் போருக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஏனென்றால், போர் ஒன்றை முன்னெடுக்கும் போது, எந்தவொரு எதிரியும், பொருளாதார ரீதியாக நெருக்கடியைக் கொடுப்பது தான் வழக்கம்.

உக்ரேனின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன் பொருளாதாரக் கட்டுமானங்களையும், ஏற்றுமதியை மேற்கொள்ளும் துறைமுகங்களையும் தான் முடக்கியது.

அதுபோல, ரஷ்யாவுக்கு எதிராக உலகமே திரண்டு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

இது, போரின் மீதான கவனத்தை திருப்பவும், போர் மீதுள்ள கவனத்தை குறைக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு உலகளாவிய உத்தி.

பொருளாதாரம் ஆட்டம் கண்டு விட்டால், போரை முன்னெடுக்க முடியாது என்பதால், தமிழ் இயக்கங்கள், மக்கள் மத்தியில் தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க முயன்றன.

1990ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி மட்டக்களப்பில், இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, பொலிஸ் நிலையங்கள் முதலில் புலிகளால் வசப்படுத்தப்பட்டன.

அதையடுத்து, மோதல்கள் இராணுவ முகாம்களுக்குப் பரவின. அந்த மோதல்களை தணிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போது, ஜூன் 15ஆம் திகதி வரை வடக்கு அமைதியாகவே இருந்தது. 15ஆம் திகதி மாலையில் தான், பலாலியில் மோதல்கள் வெடித்தன. 

பலாலியில் குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க, வானத்தில் சியாமாசெற்றி குண்டுவீச்சு விமானங்களும், ஹெலிகொப்டர்களும் வட்டமடித்துக் கொண்டிருக்க, தொண்டைமானாறு பிள்ளையார் கோவில் முன்றிலில் விடுதலைப் புலிகளால் ஒரு போர்க்கால கருத்தரங்கு நடத்தப்பட்டது.

அதில் பிரசாரப் பிரிவில் இருந்த கவிஞர் முவேயோ வாஞ்சிநாதன், அப்போது வல்வெட்டித்துறை பிரதேச பொறுப்பாளராக இருந்த, கப்டன் வினோத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

(அந்தக் கூட்டத்தில் பங்கேற்று 3 வாரங்கள் கழித்து, கப்டன் வினோத் வடமராட்சி கடலில் கடற்படையினரின் எடித்தாரா என்ற கட்டளைக் கப்பலின் மீது நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்தார்.)

போர்க்காலக் கருத்தரங்கில் உரையாற்றிய புலிகளின் பிரமுகர்கள், 3 விடயங்களை வலியுறுத்தியிருந்தனர்.

முதலாவது, போரில் தங்களுடன் இணைந்து பங்கேற்க முன்வர வேண்டும் என்ற அழைப்பு.

இரண்டாவது, விமானத் தாக்குதல்கள், மற்றும், எறிகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தேடும் வகையில், பொதுமக்கள் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டும் என்பது.

மூன்றாவது, போர் தீவிரமடையும் போது பொருளாதார நெருக்கடி ஏற்படும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும், அதனைத் தவிர்க்க, அந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தற்சார்பு பொருளாதாரத்தை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டும் என்பது.

மூன்றாவது விடயமே இப்போது முக்கியமானது. போர் தொடங்கிய அன்றே புலிகள் பொருளாதார நெருக்கடியை, தடைகளை எதிர்கொள்வதற்கான வேலைத் திட்டங்களையும் தொடங்கியிருந்தார்கள்.

அதனால் தான், போர்க்காலக் கருத்தரங்கில் அவர்களால், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி, பட்டினி உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கு தயாராகுமாறு, அவர்கள் மக்களிடம் வலியுறுத்தினார்கள். இது தான் போர்க்கால அடிப்படையில் செயற்படுதல்.

அவர்கள், வெறும் பிரசாரத்துடன் நிற்கவில்லை. அதற்கான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்தார்கள். அதற்கு ஆலோசனை வழங்க கூடிய வல்லுநர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பொருளாதாரக் கட்டுமானங்களுக்கு ஒரு பகுதி வளங்களை ஒதுக்கி, அதனைப் பலப்படுத்துவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில், முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்புத் திட்டங்களும், தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளும் தான், இன்றைக்கு வடக்கிலுள்ள மக்கள் ஓரளவுக்காவது, பெரும் நெருக்கடிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.

அமைச்சர் மகிந்த அமரவீர வடக்கிலுள்ள மக்கள் விழிப்புணர்வுடன், செயற்படுகின்றனர் என்று அண்மையில் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்குவாரங்கள் ஏற்படப் போகிறது என்பது, அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். ஆனாலும், தற்சார்பு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு கட்டமைப்பு சார் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

திட்டங்கள் வகுக்கப்பட்டனவே தவிர அவை செயற்படுத்தப்படவில்லை. அறிவிப்புகளில் இருந்த வேகம், செயற்பாடுகளில் இருக்கவில்லை.

இராணுவத் தளபதி தலைமையில் பசுமை விவசாய செயலணி அமைக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னர் தான், இராணுவத்தை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது.

நாட்டின், அரசாங்கத்தின் பொருளாதாரத்தில் அதிகளவு பங்கை உறிஞ்சுவது முப்படைகள் தான்.  அதனை பொருளாதார  கட்டுமானங்களுக்கும், உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதற்கு இன்னமும் கூட முழு அளவில் அரசாங்கம் தயாராகவில்லை.

போர்க்கால அடிப்படையில் தயாராவது என்பது படைகளுக்குத் தான் அதிகம் புரியக் கூடிய மொழி.

ஆனால், தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, போர்க்கால அடிப்படையில் என்ன தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04